வைகை அணையினை துார்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா... விவசாயிகள் எதிர்பார்ப்பு
பைல்படம்
வைகை அணையை தூர்வார தமிழரக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக பாரதிய கிசான் சங்கம் தேனி மாவட்ட தலைவர் டாக்டர் எம்.சதீஷ்பாபு தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் இணைக்கப்பட வேண்டிய விசயங்கள் குறித்து சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் தேனி மாவட்டத்தின் சார்பில் கீழ் கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளின் அனைத்து விளை பொருட்களுக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.(காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட).
2.தேனிமாவட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறையினர் சார்பில் புதிதாக நான்கு- நவீன நெல் அறுவடை இயந்திரங்களை வாங்கி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தமிழக அரசு வாடகைக்கு கொடுக்க வேண்டும்.
3. தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் 3 அல்லது 4 புதிய உழவர்சந்தைகள் தொடங்க வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
4. வேளாண் & தோட்டக்கலை துறை மூலமாக தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காய்கறிகள் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும்.
5. தேனிமாவட்டத்தில் விவசாயிகள் பாரம்பரிய நெல்ரகம் பயிரிடுதலை ஊக்குவிக்க பயிரிட விரும்பும் விவசாயிகளுக்குவிதைநெல்லை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்க வேண்டும்.
6. சிறுதானியம், பயறு வகை சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
7.விவசாயிகள் முழுமையாக பயன்பெற வேண்டுமானால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி,குளம்,அணைகளும் தூர்வாரிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையினை தூர்வார தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
8. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
9. இயற்கை விவசாயத்தில் மிக முக்கியமான பங்கு நாட்டு இன மாடுகள் தான். குறிப்பாக தேனிமாவட்டத்தில் பட்டி இன நாட்டு மாடுகளை காத்திட வேண்டியும், தற்சமயம் நீதிமன்றத்தில் மேய்ச்சல் அனுமதி இல்லாததால், பட்டிஇன மாடுகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிரமம் உள்ளது ஆகவே தமிழக அரசு, பட்டிஇன மாடு வளர்ப்போர் அனைவருக்கும் மாட்டுத்தீவனங்களை கால்நடை துறை சார்பில் இலவசமாக வழங்க வேண்டி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
10.தமிழக அரசு, மாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமை கிடைத்திட மேல்முறையீட்டு சட்ட நடவடிக்கைகளை அரசு வழக்கறிஞர்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
11.ஏரி,குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
11. வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுத்திடும் வகையில் தேனி மாவட்டத்தில் வனப்பகுதியினை ஒட்டி தமிழக அரசின் மூலம் சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும். விவசாயிகளுக்கும் சோலார் மின்வேலி அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu