பெரியாற்றின் குறுக்கே 125 ஆண்டுகளாக பாலம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்
பைல் படம்
கூடலுாரில் இருந்து ஊமையன் தொழு என்று அழைக்கப்படும் இந்திராநகர் பகுதிக்கு செல்ல முல்லை பெரியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், 125 ஆண்டுகளாக தென்னை மரப்பாலத்தின் வழியாக ஆற்றினை கடந்து செல்கின்றனர். இப்படி செல்லும் போது தவறி ஆற்றுக்குள் விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் பலநுாறை தாண்டும். இங்கு பாலம் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை 1895 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதும் திறக்கப்பட்ட தண்ணீர், இறைச்சல் பாலம் வழியாக லோயர்கேம்பினை கடந்து முனிக்கரை என்ற இடத்தினை கடந்து கருனாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, உத்தமபாளையம் வழியாக வீரபாண்டி, தேனி வந்து வைகை ஆற்றுடன் கலக்கிறது. சராசரியாக முல்லை பெரியாறு 200 மீட்டருக்கும் மேல் அகலம் கொண்டதாக உள்ளது. கூடலுார் அருகே முனிக்கரை என்ற இடத்தினை கடக்கும் போது மட்டும் இதன் அகலம் 10 மீட்டர் ஆக குறுகி .உள்ளது. அதனால் இந்த இடத்தில் ஆழமும் அதிகம். தண்ணீரின் வேகமும், சுழற்சியும் அதிகம்.
கூடலுாரில் இருந்து ஊமையன்தொழு என்றழைக்கப்படும் இந்திராநகர், சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு செல்ல வயல்வெளிகளை கடந்து, இந்த முனிக்கரையினை கடந்து செல்ல வேண்டும். இந்த முனிக்கரையில் தென்னை மரத்தை அறுத்து போட்டு பாலம் அமைத்துள்ளனர். இந்த பாலத்திற்கு கைபிடி கிடையாது. இந்திராநகரில் 300 குடும்பங்கள் உள்ளன. 80 மாணவர்கள் உள்ளனர். சுருளியாறு மின்நிலையத்தில் இதே எண்ணிக்கையில் உள்ளனர். சுருளியாறு மி்ன்நிலையத்தில் வசிப்பவர்கள் முக்கியமான சில நேரங்களில் மட்டும் முனிக்கரை பாதையினை கடந்து கூடலுார் வருகின்றனர். ஆனால் இந்திராநகர் குடியிருப்பு மக்களின் கல்வி, மருத்துவம் உட்பட ஒட்டுமொத்த வாழ்வியல் தேடல்களுக்கும் இந்த பாதையை விட்டால் வேறு வழியில்லை.
இது தவிர கூடலுாரை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகளுக்கு முல்லை பெரியாற்றின் மறுபுறம் விளைநிலங்கள், தோப்புகள் உள்ளன. இதனால் கூடலுாரை சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் இந்த தென்னை மரப்பாலத்தை கடந்து செல்கின்றனர். இப்படி கடந்து செல்லும் போது, ஒரு சிலர் தவறி விழுந்து உயிரிழந்து விடுகின்றனர். இதுவரை இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் பல நுாறினை தாண்டும்.முனிக்கரையின் இருபுறமும் நெல் வயல்களும், தோப்புகளும் உள்ளதால் பாலம் கட்டினாலும் பலன் இல்லை. ஆனால் கைபிடி சுவருடன் கூடிய கான்கிரீட் நடைபாலம் கட்டாயம் தேவைப்படும்.
இங்கு கான்கிரீட் நடைபாலம் கட்ட வேண்டும் என சுதந்திரத்திற்கு பின்னரே மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தி ஆறு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் இவர்களுக்கு நடந்து செல்ல ஒரு கான்கிரீட் பாலம் கட்டப்படவில்லை என்பதே வேதனையான உண்மை. இங்கு பாலம் வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பலர் மனு அனுப்பி உள்ளனர். தற்போதைய நிலையில் இந்த பாலம் கட்ட சில லட்சம் ரூபாய்கள் கூட போதுமானது. அத்தியாவசிய தேவையான இந்த பாலம் கட்டித்தர வேண்டும் என்பதே கூடலுார், இந்திரா காலனி, சுருளியாறு மின்நிலைய மக்களின் கோரிக்கையாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu