தண்ணீர் திறப்பை முறைப்படுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
வைகை அணை.
தமிழக அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் மற்றும் விவசாயிகள் விடுத்த கோரிக்கையில், வைகை அணை முழு கொள்ளளவை எட்டி இருக்கும் நிலையில், அணையை திறந்துள்ளனர். திறந்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் அணை மூடப்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை.
அணை திறப்பு ஏன் முறைப்படுத்தப்படுவதில்லை என்கிற கேள்வி எழுகிறது. வழக்கமாக ஆகஸ்ட் 15 ல் திறக்கப்படும் அணை, தென்மேற்கு பருவமழை பின்தங்கியதால், காலதாமதமாக திறக்கப்படுகிறது.
அணை தன்னுடைய முழு கொள்ளளவான 71 அடியை எட்டி இருக்கும் நிலையில், முதலில் திறக்கப்பட வேண்டியது 58 ஆம் கால்வாய் தான். உசிலம்பட்டியை வளமடைய வைக்கும் 58 ஆம் கால்வாய்க்கு வைகை அணையில் 67 அடி இருந்தால் தண்ணீர் திறக்கலாம். 67 அடிக்கு கீழே வந்தால் தண்ணீர் 58 ஆம் கால்வாய்க்கு ஏறாது. பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள இருபோகப் பாசனப்பகுதியான 45,000 ஏக்கருக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், வேகமாக அணையின் நீர்மட்டம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 67 அடிக்கு கீழே சென்றால் 58 ஆம் கால்வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட ஏறாது என்பதால் அரசும் அதிகாரிகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எனவே போர்க்கால அடிப்படையில் 58 ஆம் கால்வாய்க்கும் தண்ணீரைத் திறந்து உசிலம்பட்டி பகுதியை வளமடைய வைக்க வேண்டும். அடுத்து திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கருக்கு தண்ணீரை திறக்க வேண்டும்.
சம நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகாவிலுள்ள கட்டானிப்பட்டி 1 மற்றும் 2,லெசிஸ்,ஷீல்டு உள்ளிட்ட ஐந்து பிரதான கால்வாய்களுக்கும் தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.
பெரியாறு பாசன பகுதியிலேயே மேலூர், சிவகங்கை வட்டாரம் தான் அதிகபட்சமாக 85 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெரும் பகுதியாகும். வடகிழக்கு பருவமழை சீராக பெய்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர் இருப்பு அபரிமிதமாக இருப்பதாலும், வரத்து கூடுதலாக இருப்பதாலும், சம நேரத்தில் அனைத்து பாசன பகுதிகளுக்கும் தண்ணீரை திறப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.
வைகை அணைக்கு கொட்டக்குடி ஆற்றில் இருந்தும், மூல வைகையிலிருந்தும் பெருமளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்தி வைத்திருப்பதை வரவேற்கிறோம். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை நீர்மட்டம் எட்டும் வரை தண்ணீர் திறக்கக் கூடாது என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறோம்.
இரண்டாம் போக பாசனத்திற்கு தேவையான போதுமான தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலைப்பட ஏதுமில்லை. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் அரபிக்கடலில் உருவாகி வருவதால், அடுத்த பத்து இருபது நாட்களுக்கு பெரியாறணைக்கான நீர்வரத்து குறையப்போவதில்லை என்பது திண்ணம்.
எனவே பெரியாறு வடிநிலக்கோட்டை அதிகாரிகள், தண்ணீர் திறப்பை போர்க்கால அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும். அனைவரும் விவசாயிகள் தான், அனைவரும் பெரியாறு நீரை குடித்து வளர்ந்தவர்கள் தான். எனவே இங்கு பேதம் என்பது எதுவும் இல்லை. தண்ணீர் திறப்பை முறைப்படுத்துங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu