வடகிழக்கு பருவமழை பெய்தாலும் கண்மாய்கள் நிறையவில்லை

வடகிழக்கு பருவமழை பெய்தாலும்  கண்மாய்கள் நிறையவில்லை
X

வைகை ஆறு. இடம் ஆண்டிபட்டி.

வைகையில் வெள்ளம் வந்தும் தேனியில் உள்ள கண்மாய்கள் நிரம்பவில்லை என விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நான்கு மாதங்கள் ஆகியும் பாதிக்கும் அதிகமான கண்மாய்கள் இன்னமும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முழுமையாக பொய்த்து போனது. வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பெய்யாவிட்டாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் பெய்து வருகிறது. ஆனாலும் தேனி மாவட்டத்தில் பல கண்மாய் களுக்கு நீர் வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பே நிரம்ப வேண்டிய கண்மாய்கள் இப்போது வரை வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மேகமலை பகுதியில் நல்ல முறையில் மழை பெய்கிறது. இதனால் வைகை நதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளம் வந்து கொண்டுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் குடிமரமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை. இதனால் ஆறுகளில் வெள்ளம் வந்தாலும் வரத்துக்கால்வாய்கள் துார்வாரப்படாததால், கண்மாய்களுக்கு என்னமோ இன்னும் தண்ணீர் வரவில்லை. குறிப்பாக வைகை நதி தண்ணீர் மூலம் நிரம்பும் ஒட்டணை, செங்குளம், துரைச்சாமிபுரம் கால்வாய் பாசன கண்மாய்கள், ராமச்சந்திராபுரம், மேலப்பட்டி, தர்மராஜபுரம், முறுக்கோடை, வாலிப்பாறை, நரியூத்து, ஆலந்தளிர், மூலக்கடை, தொப்பையாபரம், கோம்பைத்தொழு, குமணன்தொழு, பொன்னம்படுகை பகுதி கண்மாய்களில் போதுமான தண்ணீர் வரவில்லை.

தேனி பகுதியில் லட்சுமிபுரம், பூவலச்சேரி, முதலியார் குளம், நாயக்கன்குளம், தேனி பொம்மையகவுண்டன்பட்டி சிகு ஓடை கண்மாய், மற்றும் வரட்டாறு மூலம்் நிரம்பும் கண்மாய்கள் எதுவும் நிரம்பவில்லை. ஆண்டிபட்டி தாலுகாவில் 90 சதவீதம் கண்மாய்கள் வறண்டே கிடக்கின்றன. சின்னமனுார், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், சுக்கான்கல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, ஏரசக்கநாயக்கனுார் கண்மாய்களும் முழுமையாக வறண்டு கிடக்கின்றன.

தற்போதைய நிலையில் முல்லை பெரியாறு மற்றும் வராகநதி பாசன பகுதிகளில்் உள்ள கண்மாய்கள் மட்டும் முழுமையாக தண்ணீர் நிறைந்துள்ளது. மஞ்சளாறு பகுதிகளில் ஓரளவு மட்டும் நிறைந்துள்ளது. இவ்வளவு மழை பெய்தும், கண்மாய்களுக்கு நீர் கொண்டு வந்து நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். மொத்தத்தில் மழை பெய்தும் பலன் இல்லாத நிலையே உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
future ai robot technology