பெரியாறு அணை குறித்து பொய் பிரச்சாரம்: கேரள மக்கள் புறக்கணிப்பு
முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருக்காக்கரை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. பிரச்சாரத்தின் போது, காங்., கட்சி வேட்பாளர் உஷாதோமஸ் முல்லைப்பெரியாறு அணை பற்றி பேசாமல், தனது கட்சியின் கொள்கை, செயல்திட்டங்கள் பற்றி பேசி பிரச்சாரம் செய்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஜோசப் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகவே பிரச்சாரம் செய்தார். வழக்கறிஞர் ரசல்ஜோய் என்பவர் 'சேவ் கேரளா' என்ற அமைப்பினை உருவாக்கி, அந்த அமைப்பின் மூலம்,' முல்லைப்பெரியாறு அணையால் கேரளாவிற்கு பெரும் ஆபத்து உள்ளது. எனவே முல்லைப்பெரியாறு அணையினை இடிக்க வேண்டும். இதற்கு ஆதரவு தருபவர்கள் நோட்டாவிற்கு வாக்களியுங்கள். நீங்கள் உங்களின் கருத்துக்களையும், ஒற்றுமையினையும் இதன் மூலம் வெளிப்படுத்துங்கள்' என கடுமையாக பிரச்சாரம் செய்தார். இதனால் தேர்தல்களம் அனல்பறந்தது.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 70 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதில் தனது கட்சியின் கொள்கை, தனது செயல்திட்டம் பற்றி பேசிய காங்கிரஸ் வேட்பாளர் உஷாதோமஸ் 72 ஆயிரத்து 770 ஓட்டுகள் பெற்று பெரும் வெற்றி பெற்றார். முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஜோசப் 47 ஆயிரத்து 754 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். பாரதீயஜனதா கட்சி வேட்பாளர் என்.ராதாகிருஷ்ணன் 12 ஆயிரத்து 957 ஓட்டுகள் பெற்றார். முல்லைப்பெரியாறு அணையினை இடிக்க ஆதரவு கேட்டு ஒரு மாதமாக பொய் பிரச்சாரம் செய்து, தனது கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்த வக்கீல் ரசல்ஜோய் 1111 ஓட்டுகள் (இவை நோட்டாவிற்கு விழுந்த ஓட்டுகள்) மட்டுமே பெற்றார். இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் வக்கீல் ரசல்ஜோயின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பாமல் புறக்கணித்து விட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையினை வைத்து பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் வேட்பாளரும் தோற்று விட்டார். தனது கட்சியின் கொள்கை, செயல்பாட்டினை பற்றி மட்டும் பேசி வீண் ஜம்பம் அடிக்காத தமிழச்சியான உஷாதோமஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரள மக்கள் தமிழக மக்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரான மனநிலையில் இல்லை. முல்லைப்பெரியாறு அணை பற்றிய பொய் பிரச்சாரத்தையும் அவர்கள் நம்பவில்லை. இனியாவது முல்லைப் பெரியாற்றினை வைத்து பிழைப்பு நடத்தும் கேரள அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறிவுரை வழங்கி, தேர்தல் முடிவுகளை வரவேற்று உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu