போலி நகைகள் விற்பனை அதிகரிப்பு: நகைக்கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாடு முழுவதும் போலி நகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றை நகைக்கடை உரிமையாளர்கள் கண்டுபிடிப்பதே சிரமம். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசும் போலி நகை விற்பனை செய்பவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகைக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தேனி தங்க நகை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. வழக்கமாக 22 கேரட் நகைகளை (92 டச்) தான் விற்க வேண்டும். இந்த நகைகளை விற்பனை செய்ய இந்திய தர நிர்ணய நிறுவனத்திடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்படி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பி.ஐ.எஸ்., ஹால்மார்க் நகைகளை முத்திரையிட்டு விற்க முடியும். இப்படி முறைப்படி உரிமம் பெற்று விற்பனை செய்பவர்கள் 40 சதவீதம் மட்டுமே. பெரும்பாலானோர் உரிமம் பெறாமல் 18 கேரட் உள்ள நகைகளை (72 டச்) பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனை செய்கின்றனர்.
இந்த நகைகளை பச்சை போட்டு ஆசிட் ஊற்றி, அரம் போட்டு பார்த்தாலும் கண்டறிய முடியாது. நகைக்கடை உரிமையாளர்களே கண்டறிவது சிரமம். இதனை மறு விலைக்கு விற்கும் போது தான் இதன் உண்மையான தரம் என்ன என்பதை கண்டறிய முடியும். அந்த அளவு தரம் குறைந்த நகைகளை நேர்த்தியாக வடிவமைக்கின்றனர். இதனை வாங்கும் பொதுமக்கள் கடுமையாக ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க அரசு தவறு செய்யும் நகைக்கடை உரிமையாளர்கள் மீது கடும் அபராதமும், தண்டனையும் விதிக்கும் தற்போதய சட்ட நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்/
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu