போலி டாக்டர்களால் கதிகலங்கும் தேனி மாவட்டம்..!
போலி மருத்துவர்கள் (கோப்பு படம்)
தேனி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அலோபதி மருத்துவர்கள் உள்ளனர். மாவட்டத்தலைநகரான தேனி, மற்றும் போடி, கம்பம், பெரியகுளம் பகுதிகளில் பல நவீன உயர்தர தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அனைத்து நகராட்சிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும் உள்ளது.
இவ்வளவையும் தாண்டி போலி டாக்டர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கிராமப்பகுதிகளில் இவர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம். காரணம் தேனி மாவட்டத்தில் மலைக்கிராமங்கள், சிறு கிராமங்கள் அதிகம் உள்ளன. போலி டாக்டர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ஊசி மருந்து செலுத்துகின்றனர். ஓவர் டோஸ் கொடுத்து ஓரிரு நாட்களில் நோயினை குணப்படுத்துகின்றனர். இளம் வயது, சற்று உடல் திறன் கொண்ட நோயாளிகள் இந்த ஓவர் டோஸ் மருந்துகளை தாங்கிக்கொள்கின்றனர்.
பல்வேறு இணை நோய்கள், நீண்ட கால நோய்கள், தீவிர நோய்கள், அறிகுறி இல்லா நோய்களை கொண்டவர்களுக்கு போலி டாக்டர்கள் வழங்கும் மருந்துகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் உயிர்ப்பலி அதிகரிக்க போலி டாக்டர்களே முக்கிய காரணம்.
கிராமப்பகுதிகளில் இருந்தும், நகர் பகுதியில் ஒதுக்குப்புறமான பகுதிகளில் இருந்தும் மிகவும் சீரியஸான பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வரும் நபர்களில் பெரும் பாலானோர் போலி டாகடர்கள் வழங்கும், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இவர்கள் கடைசி நேரத்தில் வருவதால் காப்பாற்ற முடியாமல் இறந்து விடுகின்றனர்.
இது குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் தேனி மாவட்டக்கிளை தேனி மாவட்ட மருத்துவ, சுகாதாரத்துறையிடம் புகார் செய்தும் பலன் ஏதும் இல்லை. மருத்துவ, சுகாதாரத்துறைகள் மவுனம் காக்கின்றன. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu