எந்த கவலையும் இன்றி தேர்தல் பணிகளை தொடங்கிய ஆருண்
தேனி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் எடுத்த படம் (இடமிருந்து) மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, முக்கிய பிரமுகர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி.,ஆருண், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் லாசர், பாலபாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜப்பன்.
தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு இருமுறை வென்றவர் ஆருண். இரண்டாவது முறை அப்போது சிம்மசொப்பனம் என வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளரான டி.டி.வி., தினகரனையே வீழ்த்தினார். அந்த அளவு இவரது தேர்தல் பணிகள் துல்லியமாக இருந்தன. தவிர மதுரை- போடி இரட்டை ரயில்பாதை பணிகள் பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டாலும், இதற்கு அடித்தளம் இட்டவர் அப்போதைய எம்.பி., ஆருண் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தவிர இவரது கனவு திட்டமான ஆண்டிபட்டி நெசவுப்பூங்கா இப்போது வரை பாதியில் நிற்கிறது. இந்த நெசவுப்பூங்காவின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. தொகுதியில் சிறு, சிறு பணிகளை செய்து, மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர் ஆருண். இந்த முறை தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா? இல்லை தி.மு.க.,வே நேரடியாக களம் இறங்குமா?.
எப்படி வந்தாலும், யார் வேட்பாளர்கள் என்ற எந்த விஷயத்தை பற்றியும் ஆருண் கவலைப்படவில்லை. தேனி மாவட்டம், கோம்பையில் உள்ள தனது பங்களாவை தேர்தல் அலுவலகமாக மாற்ற புதுப்பித்து வருகிறார். ஆருண் தேனி வி.ஐ.பி.,க்களை சந்திக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, முக்கிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் லாசர், பாலபாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜப்பன் ஆகியோரை தேனி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து காங்., கட்சியினர் கூறியதாவது: ஆருண் கடந்த 10 ஆண்டாக எம்.பி.,யாக இல்லாவிட்டாலும், அடிக்கடி தேனி மாவட்டத்திற்கு வருவார். தனது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார். பல விஷயங்கள் குறித்து பேசுவார். கூட்டணி கட்சியினருடன் நட்புடன் இருப்பார். இதுவும் அது போன்ற ஒரு சந்திப்பு தான். இருப்பினும் இப்போது தேர்தல் நேரம் என்பதால் செய்தியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட்டால், ஆருண் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். ஒரு வேளை தி.மு.க., தேனி தொகுதியில் களம் இறங்கினால் ஆருண் மகன் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்க வாய்ப்பு உண்டு என பலரும் பேசி வருகின்றனர். இது பற்றி இப்போது உறுதியாக எதுவும் கூற முடியாது. ஆருண் தொகுதிக்கு வந்து செல்வது வழக்கமானது தான். தற்போது நடந்து வரும் சந்திப்புகளும் நட்பு ரீதியானது தான் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu