தமிழக வனஎல்லையில் இருந்தும் பாதை வசதியில்லாத கண்ணகி கோயில்

மங்கலதேவி கண்ணகி கோவில்
மங்கலதேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழக மலைப்பகுதியில் இருக்கும் மங்கலதேவி கண்ணகி கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன.
கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப்பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் தமிழாசிரியர் தமிழாதன் கணபதிராசன் முயற்சியால் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இரா.தமிழாதன் கணபதிராசன் தலைமையில் மங்கல தேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu