இறந்தாலும் இங்கே தான் இறப்பேன்: கடைசி நேரத்தில் உறுதுணையாக நிற்கும் உள்ளங்கள்

இறந்தாலும் இங்கே தான் இறப்பேன்: கடைசி நேரத்தில் உறுதுணையாக நிற்கும் உள்ளங்கள்
X

கோப்பு படம் ( தர்ப்பணம் )

இறந்தவர்களை மிகுந்த மரியாதையுடன் வழியனுப்பும் மரபுகள் இப்போதுவரை இந்த கிராமத்தில் நடை முறையில் உள்ளது.

தேனி மாவட்டம் கூடலுாரில் இறந்தவர்களின் இறுதிப்பயணத்தின் போது மரியாதையுடன் வழியனுப்பும் சென்டிமெண்ட் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 18 ஆயிரம் பேர் வரை இருக்கும் (இதில் கொரோனா சேராது) என ஒரு புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. இதில் நகர் பகுதியில் இறப்பவர்களின் நிலை தான் மிகுந்த பரிதாபம். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட எட்டிப்பார்ப்பதில்லை. அவர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டில் இருந்தவாறே தனது தாய், தந்தை அல்லது உறவினர்களின் இறுதிச்சடங்கினை வீடியோ காலில் பார்த்து அஞ்சலி செலுத்துகின்றனர். பல உறவினர்கள் வாட்சாப்பில் அஞ்சலி செலுத்துவதோடு ஒதுங்கிக் கொள்வார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இறப்பிற்கு தான் ஒட்டுமொத்த நாடும் பெருமளவில் அஞ்சலி செலுத்தியது. கிராமம், நகரம் பாகுபாடு இன்றி, ஜாதி, மதம் பாகுபாடின்றி அத்தனை பேரையும் உலுக்கி எடுத்தது அப்துல்கலாம் மரணம் மட்டுமே.

தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மரணம் மக்களை பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. அண்மையில் பலரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கிய இறப்பு புனித்ராஜ்குமாரின் மரணம் தான். தினமும் 18 ஆயிரம் பேர் வரை இறக்கும் நாட்டில், ஏதாவது உயர் மட்ட தலைவர்கள் அல்லது நடிகர்களின் மரணம் மட்டுமே பேசப்படும் விஷயமாகிறது. அஞ்சலி செலுத்தும் விஷயமாகிறது. மேலே குறிப்பிட்டபடி நகர் பகுதியில் இறப்பவர்களுக்கு வாட்சாப்பிலும், வீடியோ காலிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஆனால் கிராமங்களில் நிலைமை அப்படியில்லை. தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்கள், சிறிய நகராட்சி பகுதிகளில் இறப்பவர்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்படுகிறது. இதில் தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சென்டிமெண்ட் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ராஜாத்தியம்மன் கோயில், அழகர்சாமி கோயில், ராஜாக்கிணற்று தெரு, விதைப்பண்ணைத்தெரு, பாரஸ்ட் ஆபீஸ் ரோடு, காந்திகிராமம் என்ற சிறு பகுதிகள் சேர்ந்து ஒரு வார்டாக உள்ளது. இங்குள்ள மக்கள் சேர்ந்து ஒரு சங்கம் நடத்துகின்றனர். (வெளிநபர்கள் இந்த பகுதிக்குள் சென்று யாருக்காவது சிறு நெருக்கடி கொடுத்து விட்டு உயிருடன் தப்பவே முடியாது. மக்கள் சூழ்ந்து விட்டால் சிக்கியவர் நிலை அதோகதி தான்).

இந்த பகுதிகளில் யாராவது இறந்தால் முதல் தகவல் சங்க நிர்வாகிகளுக்கு சொல்ல வேண்டும். அவர்கள் இறப்பு நடந்த வீட்டிற்கு வந்த நொடி முதல் அத்தனை பொறுப்புகளையும் அவர்களே கையில் எடுத்துக் கொள்வார்கள். தெருவில் சங்கு ஊதப்படும். நேரம், காலமெல்லாம் இல்லை. இறப்பு நடந்ததை அறிவிக்க சில நிமிடங்களில் சங்கு ஊதப்படும். சங்கு சத்தம் கேட்டு விட்டால் இந்த குறிப்பிட்ட தெருக்களில் வசிப்பவர்கள் யாரும் வேலைக்கோ, வெளியூருக்கோ செல்ல மாட்டார்கள். அப்படி சென்றால் சங்க நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அனுமதி பெற்று, அவருக்கு பதில் வேறு நபரை அனுப்பி வைத்து விட்டு செல்ல வேண்டும்.

இறுதி சடங்கிற்கு உரிய அத்தனை பணிகளையும், இறப்பு வீட்டாருடன் சேர்ந்து சங்க நிர்வாகிகளே மேற்கொள்வார்கள். இறுதி ஊர்வலத்தின் போது தேரை சுடுகாட்டு வரை எடுத்துச் செல்வதும் சங்க நிர்வாகிகள் தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எவ்வளவுமழை பெய்தாலும், பருவநிலை மோசமாக இருந்தாலும், இறுதிப்பயணத்தில் ஒட்டுமொத்த தெருவும் கூடியிருக்கும். இதில் போடுபணம் என்ற ரீதியில் தெரு மக்கள் முடிந்த அளவு ஆளாளுக்கு சிறிது பணம் போட்டு இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு உதவுவார்கள். இறப்பு நடந்தது முதல் இறுதிச்சடங்கு நடக்கும் வரை ஒட்டுமொத்த தெரு மக்களும் அந்த வீட்டில் கூடியிருந்து அவரது இறுதிப்பயணத்தில் பங்கேற்று மரியாதை செய்வார்கள். இறந்தவரை அடக்கம் செய்த பின்னர், அல்லது எரியூட்டிய பின்னரே அடுத்த வேலைகளை கவனிக்க செல்வார்கள்.

இந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட இந்த மரபினை மீறியதில்லை. அந்த அளவு சென்டிமெண்ட் உடன் தெரு மக்கள் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள். இந்த தெருவில் வசிப்பவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான். அந்த அளவு பாதுகாப்பும் கிடைக்கும். மரியாதையும் கிடைக்கும். அதுவும் இந்த தெருவில் வசிக்கும் வயதானவர்கள், வேறு பகுதியில் வாழ்ந்து இறக்க விரும்பவே மாட்டார்கள். அந்தளவு இறந்தவரின் இறுதிப்பயணத்தில் மரியாதை கிடைக்கும். இப்படி தமிழகத்தில் பல கிராமங்களில் நடைமுறைகள் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நல்ல விஷயம் தானே.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்