ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீர் மதுரை நோக்கி பாய்ந்து செல்கிறது. படம் எடுக்கப்பட்ட இடம் ஆண்டிபட்டி.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் தற்போது வரை வெயில் வாட்டி எடுத்தது. மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமே மிகவும் குறைந்து போனது. வெயிலின் கடுமை அதிகரிக்க, அதிகரிக்க நீர் வளம் மிகவும் சுருங்கியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் சற்று கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மிகவும் பலத்த மழை என்று இல்லாவிட்டாலும், சுமாரான மழைப்பதிவு இருந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனியில் 16.4 மி.மீ., சோத்துப்பாறையில் 7 மி.மீ., வைகை அணையில் 3.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 10.6 மி.மீ., பெரியாறு அணையில் 5 மி.மீ., சண்முகாநதி அணையில் 1.2 மி.மீ., மழை பதிவானது.
இப்படி ஐந்து நாட்களாக தொடர்ந்து சீரான மழைப்பதிவு இருந்தாலும், அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் என எங்குமே நீர் வரத்து இல்லை. காரணம் அதிக சூடாக இருந்த பூமி மழை நீர் முழுதையும் குடித்து விட்டது. இன்னும் பூமி குளிரவில்லை. பூமி குளிர்ந்தால் மட்டுமே மழைநீர் ஓடைகள், ஆறுகள் வழியாக கண்மாய்கள், அணைகளுக்கு வரும். ஆனால் தேனி மாவட்டத்தில் இன்னும் எங்குமே நீர் வரத்து இல்லை.
வைகை அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கு நீர் வரத்து சுத்தமாக இல்லை. பெரியாறு அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 131 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
ஆனால் அணைகளின் நீர் மட்டம் நல்ல நிலையில் தான் உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் ஐம்பத்தி நான்கு அடி வரை உள்ளது. பெரியாறு அணையின் நீர் மட்டம் நுாற்றி பதினைந்து அடி வரை உள்ளது. சோத்துப்பாறை நிரம்பி வழிகிறது.
அணையின் நீர் மட்டம் திருப்தியாக உள்ள நிலையில், வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை பாசனத்திற்கு விநாடிக்கு மூவாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. சில இடங்களில் வேண்டுமானால் மிதமான மழையிருக்கும். மற்றபடி மாவட்டம் முழுவதும் வெயில் தான் இருக்கும். சில நேரங்களில் சுட்டெரிக்கவும் வாய்ப்புகள் உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu