ஆண்டவனிடம் வரிசை எல்லாம் கிடையாது: ‘கலகலப்பூட்டிய’ 94 வயது முன்னாள் ராணுவவீரர்

ஆண்டவனிடம் வரிசை எல்லாம் கிடையாது:   ‘கலகலப்பூட்டிய’ 94 வயது முன்னாள் ராணுவவீரர்
X

பெரியகுளத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் 94 வயதான முன்னாள் ராணுவவீரர் மரியபொன்னுசாமிக்கு துணைப்பொதுமேலாளர் அமீத் ரஞ்சன் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இளம் வயதினருக்கு எவ்வளவோ சலுகைகளை வழங்கும் வங்கிகள், முதியவர்களுக்கு வழங்குவதில்லை. காரணம் வயதாகி விட்டதாம். இறைவனிடம் வரிசை எல்லாம் கிடையாது என பேசி கலகலப்பூட்டினார்

தேனி மாவட்டம் பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 94 வயதான முன்னாள் ராணுவவீரர் மரியபொன்னுச்சாமிக்கு துணைப்பொதுமேலாளர் அமீத்ரஞ்சன் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதனை ஏற்ற பின்னர், முன்னாள் ராணுவவீரர் மரிய பொன்னுச்சாமி பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், தற்போது முதியவர்கள் வங்கிகளுக்கு சென்றால் மதிப்பதில்லை. முதியவர்களுக்கு கடன் தரக்கூட மறுக்கின்றனர். இளம் வயதினருக்கு எவ்வளவோ சலுகைகளை வங்கிகள் வழங்குகின்றன. ஆனால் முதியவர்களுக்கு தனி கவுண்டர் இல்லை. கடன் வசதிகள் இல்லை.

நான் ஒரு பழைய காரை வாங்க கடன் கேட்டேன். கடனை பற்றி பேசாதீர்கள் என என்னிடம் கூறி விட்டனர். காரணம் என்ன தெரியுமா? எனக்கு வயதாகி விட்டதாம். நான் முத்தின பழமாம். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவேனாம். இளம் வயதில் கடன் வாங்கியவர்களுக்கு இறப்பே கிடையாதாம்.

முன்னால் வந்தவர்கள் முன்னால் செல்வார்கள். பின்னால் வந்தவர்கள் பின்னால் தான் செல்வார்கள் என வங்கி அதிகாரிகள் நினைக்கின்றனர். அது தவறு. இறைவனிடம் வரிசை எல்லாம் கிடையாது. அவன் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் துாக்குவான். எனவே முதியவர்களையும் மதித்து சில சலுகைகள் தாருங்கள் என்று பேசினார்.

இதனை கேட்ட கருத்தரங்கில் இருந்த உயர் அதிகாரிகள் உட்பட அத்தனை பேரும் சிரித்து விட்டனர். வயது முதிர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் இந்த நகைச்சுவையான பேச்சை வரவேற்று, கை தட்டலுடன் கூடிய சிரிப்பொலி அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டது.

அடுத்தடுத்து பேசிய வாடிக்கையாளர்கள், ’தேனி ஸ்டேட் வங்கி மேலாளர் ரெங்கராஜன், உதவி மேலாளர் கார்த்தி ஆகியோர் 2 நாளில் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கினர். அதனை எங்களால் நம்பவே முடியவில்லை. அதேபோல் பல நல்ல மாற்றங்கள் வங்கிகளில் நடந்து வருகின்றன. இது வரவேற்க கூடியது.

தென்கரையில் ஏ.டி.எம்., வசதி வேண்டும். ஜெயமங்கலம் வங்கியில் பணியாளர் பற்றாக்குறையால் சேவைகள் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். ஏ.டி.எம்.,களில் சம்பள நாட்களில் தொடர்ச்சியாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கு ஏதாவது மாற்று வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

தவிர பல நேரங்களில் பரிவர்த்தனைகள் தொடர்பான மெசேஜ்கள் வருவதில்லை. இதனால் எங்கள் கணக்கில் சம்பளம் ஏறி விட்டதா எனக்கூட தெரிந்து கொள்ள முடியவி்ல்லை. இந்த பிரச்னைகளை உடனே சரி செய்ய வேண்டும். கல்விக்கடன் வழங்குவதில் அரசு வழிகாட்டுதல்களை வங்கிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

வங்கிகளின் சேவை காரணமாக பல ஆயிரம் பெண்கள் கந்து வட்டிக்கும்பல்களிடம் இருந்தும், மைக்ரோ பைனான்ஸ்களிடம் இருந்தும் மீண்டுள்ளனர். பல மாற்றுத்திறனாளிகள் சொந்த தொழில் செய்து தங்கள் வாழ்வியல் வளங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர். இது போன்ற நல்ல சேவைகளை மேலும் எளிமைப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், தங்களது மேலதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகளை கொண்டு சென்று நல்ல முடிவுகளை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!