பவன்குமார் சாம்லிங் நிலை எடப்பாடிக்கும் வருமா? பழைய கதை ஒன்றை படிங்க..!

பவன்குமார் சாம்லிங் நிலை எடப்பாடிக்கும் வருமா? பழைய கதை ஒன்றை படிங்க..!
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சிக்கிம் முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங் என்ற ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இப்ப தெரிந்துகொள்ளுங்கள்.

சிக்கிம் முன்னாள் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் மக்கள் தலைவராக சிக்கிம் மாநிலத்தின் கதாநாயகனாக ஒரு காலத்தில் இருந்தவர். ஆனால் அவரது இன்றைய நிலை கவலைக்குரியது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு சாம்லிங் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் சிக்கிமில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய சாம்லிங் பற்றி பா.ஜ., நிர்வாகிகள் தற்போது நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை நமது இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்கு தந்துள்ளோம். அவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளதின் பின்னணி குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

1994ல் இருந்து 2019 வரை சிக்கிமில் முதல்வராக இருந்தவர் பவன் குமார் சாம்லிங். இந்தியாவில் நீண்ட நாட்களாக முதல்வராக இருந்தவர் என்கிற ரெக்கார்டெல்லாம் வைத்து இருக்கிறார்.

சிக்கிமில் எதிர்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்தவர். ஆனால் இன்றைக்கு அவர் எதிர்கட்சியாக கூட இல்லை. சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற அவருடைய கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவாக அவர் மட்டுமே இருக்கிறார்.

சாம்லிங் மத்திய பிஜேபியுடன் நட்பாக இருந்து கொண்டு தான் இருந்தார். இருந்தாலும் சிக்கிமில் பிஜேபியை வளர விடாமல் தடுத்து கொண்டே இருந்தார். சிக்கிம் சட்டமன்றத்தில் எப்படியாவது ஒரு பிஜேபி எம்எல்ஏ நுழைய வேண்டும் அதற்கு உங்களின் தயவு வேண்டும் பதிலுக்கு மத்திய அரசு மூலமாக உங்கள் ஆட்சிக்கு உதவ வழி செய்வோம் என்று சமர்த்தாக சாம்லிங் உடன் பணிவாக பா.ஜ.,வினர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

.ஆனால் சாம்லிங் எனக்கு யார் தயவும் தேவையில்லை சிக்கிமில் எனக்கு எதிரியே கிடையாது என்று பிஜேபியை ஓரம் கட்டியே வைத்து இருந்தார். இந்த நேரத்தில் 2019 மே மாதத்தில் சிக்கிமில் சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்பொழுதும் பிஜேபி இரண்டு மூன்று சீட் கொடுங்க என்று சாம்லிங் முன் பணிந்து நின்றது.

சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்

பதிலுக்கு சாம்லிங் பிஜேபியுடன் இனி உறவே கிடையாது என்று அறிவிக்க பதிலுக்கு பிஜேபி சரி அப்புறம் உங்க இஷ்டம் எங்க வழியை நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி விட்டு சாம்லிங் கட்சியில் இருந்து பிரிந்த பிரேம் சிங் தமாங் உடன் கை கோர்த்தது.

சாம்லிங்கை வீழ்த்த தமாங் உடன் கை கோர்த்த பிஜேபி 2019 தேர்தலில் சாம்லிங் கட்சியை தோற்கடித்து சாம்லிங்கின் முதல்வர் பதவியை காலி செய்தது. எம்எல்ஏ ஆக தகுதியில்லாத தமாங்கை சிக்கிமின் முதல்வராக்கி அழகு பார்த்தது. அது மட்டுமல்லாமல் சாம்லிங் கட்சியில் இருந்த 10 எம்எல்ஏக்கள் பிஜேபியில் இணைந்து விட்டார்கள். இப்பொழுது 32 எம்எல்ஏக்கள் உடைய சிக்கிம் சட்டமன்றத்தில் சாம்லிங் மட்டுமே சிக்கிம் ஜனநாயாக முன்னணியின் ஒரே எம்எல்ஏவாக இருக்கிறார்.

ஒரு காலத்தில் சிக்கிம்மில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளையும் கைப்பற்றி வந்த பவன்குமார் சாம்லிங் இன்று ஒற்றை ஆளாக சிக்கிம் சட்டமன்றத்தில் ஓரமாக அமர்ந்து இருக்கிறார்.

பதிலுக்கு பிஜேபி 12 எம்எல்ஏக்களுடன் ஆளும் கூட்டணியாக இருக்கிறது. பாருங்கள் 2 சீட் கொடுங்க என்று கேட்ட பிஜேபியை போய்யா முடியாது என்று எட்டி உதைத்த சிக்கிமின் நீண்ட கால முதல்வர் சாம்லிங் இப்பொழுது சிங்கிளாக இருக்கிறார்

கிட்டத்தட்ட சாம்லிங் கதைதான் எடப்பாடிக்கும் நிகழ வாய்ப்புகள் இருக்கிறது. நண்பன் என்றால் தோள் கொடுத்து தலையில் தூக்கி வைத்து அழகு பார்ப்போம். வம்புக்கு இழுத்தால் தெருவில் தூக்கி போட்டு வேடிக்கை பார்ப்போம். பவன் குமார் சாம்லிங் முன்னால் எடப்பாடி ஒரு ஆளே கிடையாது. பிஜேபியுடன் கூட் டணியை முறித்து வம்புக்கு இழுத்த எடப்பாடிக்கு நிச்சயமாக பாடம் கற்பிக்கப்படும்.

தமிழ்நாட்டின் பவன்குமார் சாம்லிங் என்று நாளைய அரசியல் வரலாற்றில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் எழுதப்படும் என்று ஏற்கனவே விதி எழுதி வைத்து இருப்பதை யாரால் தான் மாற்ற முடியும்? இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இதற்கு அ.தி.மு.க.,வினர் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags

Next Story