தொடர்ந்து சீண்டும் பா.ஜ.க...! பம்மிப் பதுங்கும் எடப்பாடி...!

தொடர்ந்து சீண்டும் பா.ஜ.க...! பம்மிப் பதுங்கும் எடப்பாடி...!
X
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, ‘இந்துத்துவா தலைவர்’ எனச் சொல்லி வம்பிழுத்திருக்கிறார் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை.

நியாயமாகப் பார்த்தால், எடப்பாடியிடமிருந்து தான் முதலில் கண்டன அறிக்கை வெளியாகியிருக்க வேண்டும். சசிகலா கூட கண்டனம் தெரிவித்து விட்டார். ஆனால், எடப்பாடியோ வழக்கம்போல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைப் பேச வைத்துவிட்டு வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.”

“`எரிமலை என்னைக்குடா அழுதிருக்கு... அதான் அவனை அழவிட்டு வேடிக்கை பார்க்கிறேன்’ என்ற ‘போக்கிரி’ பட வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.”

“இப்போது தமிழிசையும், ‘ஜெயலலிதா ஒரு சிறந்த இந்துத்துவா தலைவர்’ என்றிருக்கிறார். `அவருக்கு எதிராகப் பேச யாரைத் தேடிக் கொண்டிருக்கிறாரோ... இப்படி அமைதியாக இருக்கத்தான் கட்சிக்குள் ஒரு மகாபாரத யுத்தத்தையே செய்து பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றாரா எடப்பாடி?’ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

‘பா.ஜ.க-வை எதிர்ப்பது என்றால் பயந்து நடுங்குகிறார். சொந்தக் கட்சி நிர்வாகிகள்மீது எழும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். `நான் தான் தலைவர்... நான் தான் தலைவர்’ எனத் தம்பட்டம் அடித்துக்கொள்வதைத் தவிர அவர் செய்தது என்ன?’ என சீனியர்களும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.”

“இவ்வளவு நடந்தும் ரியாக்ட் செய்யவில்லை என்றால் தொண்டர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்... சரி, அண்ணாமலை எதற்காக ஜெயலலிதாவை அப்படிச் சொன்னாராம்?” கமலாலய வட்டாரத்தில் பேசினால், இரண்டுவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். ‘அ.தி.மு.க பக்கமிருக்கும் இந்துமதச் சார்பு வாக்குகளை, பா.ஜ.க பக்கம் திருப்புவதற்கு அடிபோடுகிறார்’ என்கிறார்கள் மலைக்கு நெருக்கமானவர்கள். எதிரானவர்களோ, ‘பா.ஜ.க-வுக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள் வெடிப்பதால், அதிலிருந்து திசைதிருப்ப இப்படியொரு குண்டை வீசியிருக்கிறார்’ என்கிறார்கள்.”

“பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விசேஷம்?” “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே ஆய்வுக் கூட்டம் நடத்துவார் அண்ணாமலை என்று எதிர்பார்த்தார்கள் நிர்வாகிகள். அப்படி எதையும் நடத்தாத அண்ணாமலை, கட்சி சீனியர்களின் தொடர் அழுத்தத்துக்குப் பிறகு, மே 27-ம் தேதி தான் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், ‘தேர்தலின் போது சரியாகச் செயல்படாத நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கச் சொல்லி’ பலரும் வலியுறுத்தக் காத்திருந்தார்கள். ஆனால், அவர்களைப் பேசவே விடாமல், 4-ம் தேதி ரிசல்ட் வந்த பிறகு எப்படிக் கொண்டாடுவது, எங்கே ஸ்வீட் வாங்குவது, எங்கே பட்டாசு வாங்குவது என்று முக்கால் மணி நேரம் பேசினாராம் மலை.

`இதையெல்லாம் போனிலேயே சொல்லித் தொலைச்சிருக்கலாமே... இதுக்கெதுக்குய்யா கூட்டம்?’ என்று நொந்தபடியே வெளியேறியிருக்கிறார்கள் சீனியர்கள்.”

“அதுதானே அவரது வழக்கம்... டெல்டா மாஜி ஒருவர் புலம்பலில் இருக்கிறாராமே?” “யாரிடம் புலம்பினார் என்பதுதான் விஷயமே... சமீபத்தில், ட்ரிபிள் இனிஷியல் கட்சித் தலைவருக்கு போன் போட்ட அந்த மாஜி குசலம் விசாரித்த கையோடு, எடக்கானவரைப் பற்றிய ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்து விட்டாராம். ‘அங்க எல்லாமே கொங்கு மணிங்க வெச்சது தான் சட்டமா இருக்கு. என் மாவட்டம் வரைக்கும் வந்து பஞ்சாயத்து பண்றாங்கண்ணே. செப்டம்பர் மாசத்தோட உள்ளாட்சிப் பதவிக்காலம் முடிவடையுது. அதுக்காக, இப்பவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆளுங்க லிஸ்ட்டை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மணிங்க சொல்ற ஆளுங்களுக்குத்தான் பெரும் பகுதி சீட் கிடைக்கும்போல... இதையெல்லாம் எடக்கானவர் கண்டுக்கவே மாட்டேங்குறாரு. கட்சியே நாசமாகிடும்போல...’ என மணியடித்திருக்கிறார் அந்த சீனியர் மாஜி. அதற்கு இனிஷியல் தலைவர், ‘அமைதியா இருங்க. ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஒரு முடிவெடுத்துக்கலாம்...’ என்றிருக்கிறாராம்”

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க களமிறங்க விரும்புகிறதாம். அது தொடர்பாக, கமலாலயத் தலைமையிடம் பேசியிருக்கிறார்கள். ‘அதுக்கென்னங்கண்ணா. நீங்களே போட்டியிடுங்க... உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, வடமாவட்டங்கள்ல 60 சதவிகித சீட்டை எங்களுக்குக் கொடுத்துடுங்க...’ என டீல் பேசியிருக்கிறார் கமலால சீனியர். ஜெர்க்கான சீனியர் பாட்டாளிகள், ‘இந்த டீலுக்கு ஒப்புக்கொண்டால், ‘எங்களால்தான் நீங்களே ஜெயித்தீர்கள்’ என நமக்கே விபூதி அடித்து விடுவார்கள். அ.தி.மு.க-விடம் இதையே தான் செய்தார்கள். இடைத்தேர்தலில் சீட் ஒதுக்கப் படாவிட்டாலும் பரவாயில்லை. உள்ளாட்சித் தேர்தலில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது’ என்று தைலாபுரத்திடம் கறாராகச் சொல்லியிருக்கிறார்கள். மருத்துவர்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!