தீபாவளியை தொடர்ந்து பொங்கல் வியாபாரமும் டல்..!

தீபாவளியை தொடர்ந்து பொங்கல் வியாபாரமும் டல்..!

பொங்கல் பண்டிகை நெருங்கியபோதும் சுறுசுறுப்பின்றி வெறிச்சோடி காணப்படும் தேனி நகர வீதி.

தேனியில் தீபாவளி வியாபாரத்தை போல் பொங்கல் வியாபாரமும் டல்லடித்து வருகிறது.

தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. கொரோனாவிற்கு முன்பு வரை தேனி நகரில் தீபாவளி, பொங்கல், வீரபாண்டி திருவிழா வியாபாரம் களை கட்டும். கொரோனாவில் வாங்கிய அடியில் இருந்து இன்னும் தேனி மாவட்டம் மீளவில்லை என்றே தோன்றுகிறது.

தேனி மாவட்டத்தில் கிராமப்புற பொருளாதாரம் மீண்டு விட்டது. அதேபோல் பெரும் பணக்காரர்களின் பொருளாதார சூழ்நிலை மீண்டுள்ளது. சிறிய பணக்காரர்கள், பல்வேறு அடுக்குகளில் வாழும் நடுத்தர பொருளாதார மக்கள், ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீளவில்லை என வணிகர்கள் கூறுகின்றனர். இதனால் தான் தேனி நகரில் கடந்த தீபாவளி வியாபாரம் கடுமையாக டல்லடித்தது. கடைசி இரண்டு நாட்கள் மட்டும் வியாபாரம் இருந்தாலும், அதனால் வணிகர்களுக்கு பெரும் லாபம் இல்லை.

இந்நிலையில் பொங்கல் வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதுவும் பொய்யாகி விட்டது. இப்போது வரை தேனி நகர தெருக்களில் பொங்கல் வியாபாரம் களைகட்டவில்லை. மாறாக ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் வாங்க மழையில் நனைந்து கொண்டே நின்ற மக்களை பார்க்கையில் மிகவும் பரிதாபமாக இருந்தது. எப்படியும் ரேஷன் அட்டைக்கு பணம் உண்டு என அரசு தெளிவாக அறிவித்து விட்ட நிலையிலும், கடைசி நேரத்தில் மாறுதல் வந்து விடுமோ, டோக்கன் வாங்கினால் தான் ஆயிரம் ரூபாய் உறுதிப்படும் என மக்கள் மழையில் நனைந்து கொண்டே வரிசையில் நின்றதை பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

இப்படி ஆயிரம் ரூபாய்க்காக வரிசையில் நிற்கும் மக்கள் எப்படி பொங்கல் விழாவை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து புத்தாடை எடுத்து கொண்டாடப்போகிறார்கள் என வணிகர்கள் சற்று தளர்வான நம்பிக்கையுடன் தான் இருக்கின்றனர்.

Tags

Next Story