குடிக்க கூட தண்ணீர் இல்லை! தென் மாவட்ட விவசாயிகள் கண்ணீர்

குடிக்க கூட தண்ணீர் இல்லை! தென் மாவட்ட விவசாயிகள் கண்ணீர்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

மழை பொய்த்துப் போனதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.

பெரியாறு வைகை பாசன வி வசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வட மாநிலங்களில் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தமிழக கேரள எல்லையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் மிகப்பெரிய வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, முல்லைப் பெரியாறு நீரை நம்பி இருக்கும் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்.

கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு போக பாசனம் மட்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மதுரையும் சிவகங்கையும் இராமநாதபுரமும் என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. முல்லைப் பெரியாறு அணையை மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வைகை அணைக்கு, மூல வைகையை நம்பி எந்த பயனும் இல்லாத நிலையில், மதுரையும், சிவகங்கையும், இராமநாதபுரமும் குடிக்க தண்ணீரற்ற நிலைக்கு தள்ளப்படலாம் .

முல்லை பெரியாறு அணையில் குறைந்தபட்ச தண்ணீர் கூட இல்லாத நிலையில், மலையாள சகோதரர்கள் தொடர்ச்சியாக அந்த அணை மீது நடத்தி வரும் விஷம பிரச்சாரங்கள் எங்களையெல்லாம் வேதனையின் உச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேரளாவில் முன்னணி செய்தி நிறுவனமான மாத்ருபூமியும் இந்தப் பிரச்சாரத்தில் இறங்கி இருப்பது சொல்லொணா துயரம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்று கொடுத்த தீர்ப்புக்கு பின்னால், நீரியலில் பாண்டித்தியம் பெற்ற 14 நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

ஒரு அரசியலுக்காக கேரளாவில் தொடங்கிய முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பு பிரச்சாரம், இன்று தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களின் குடிநீருக்கே அச்சுறுத்தலாக வந்து முடிந்திருக்கிறது. கேரள மாநில அரசியலில் முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கு வாக்குகளை தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட்டு இருக்கிறது. எப்படியாவது இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு சென்று விட வேண்டும் என்கிற கேரள மாநில அரசின் தொடர் நடவடிக்கைகளால் பரிதவித்து நிற்கிறது முல்லைப் பெரியாறு அணையின் கடைமடை பகுதி.

மதுரை வரை கூட ஓரளவு தாக்குப்பிடித்து விடும் என்கிற நிலையில், சிவகங்கையும், இராமநாதபுரமும் வறட்சியின் உச்சத்திற்கே தள்ளப்பட்டு இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகள், முல்லைப் பெரியாறு அணை மூலம் தண்ணீர் பெறுகிறது. எப்போதாவது கிடைக்கும் அந்த கொஞ்சநஞ்ச தண்ணீருக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது அணைக்கு எதிரான கேரளத்து பிரச்சாரங்கள்.

1979 ல் கேரளாவில் தொடங்கிய முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு பிறகு தான், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் புலம் பெயர்வு ஆரம்பிக்கிறது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதால், செய்வதறியாது திகைத்து நின்று விவசாயத்தை இழந்த மக்கள், கிழக்காசிய நாடுகளை நோக்கியும், அரபு நாடுகளை நோக்கியும் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.

கேரளத்து சகோதரர்கள் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்வார்கள். ஆனால் வாழ்வதற்கும், வயிற்றுப்பாட்டை கழிப்பதற்கும் வெளிநாடுகளுக்கு செல்லும் கூட்டம் எங்கள் கூட்டம்.

ஒரு காலத்தில் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நெற்களஞ்சியமாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடனை தாலுகாவின் இன்றைய நிலை பேரவலம்.

நாரை பறக்க முடியாத 48 மடை கண்மாய் என்று அழைக்கப்பட்ட 48 மடைகளை கொண்ட இராமநாதபுரத்தின் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், முற்றாய் வேலிக்கருவை மண்டி கிடக்கிறது.கடந்த 2018 ம் ஆண்டுக்குப் பின்னர் ஓரளவு தாக்குப் பிடித்த ஆர்.எஸ். மங்கலத்தின் நெல் விவசாயம், இந்த ஆண்டு முற்றாக கேள்விக்குறியாகி இருப்பதோடு, குடிக்க தண்ணீராவது கிடைக்குமா என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

ஓரளவு செழிப்பான ஆர்.எஸ்.மங்கலத்தின் கதியே இதுதான் என்றால், கமுதி முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடியின் கதி என்ன...?

வைகை ஆற்றங்கரையில் இருப்பதால் பரமக்குடி நிலத்தடி நீராதாரத்தில் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படி இல்லை. இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி மிகுந்த முதல் நகரமான பரமக்குடி, இந்த ஆண்டு குடிக்க தண்ணீரின்றி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மாவட்டத் தலைநகரான இராமநாதபுரத்தில் நகருக்குள்ளே இருக்கும் 16 ஊரணிகளில் ஒன்றில் கூட தண்ணீர் இல்லை. வைகை அணை தண்ணீரால் நிரம்பும் இராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து தான் இந்த 16 ஊரணிகளுக்கும் தண்ணீர் வர வேண்டும். பெரிய கண்மாயில் இருக்கும் இரண்டு மதகுகளான வடகலுங்கிலும்,தென் கலுங்கிலும் வேலிக்கருவை மண்டிக் கிடக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் கடைமடையான சிவகங்கையும், இராமநாதபுரமும் வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சின்னா பின்னப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், எப்போதாவது அந்த தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் அணையை உடைக்க வேண்டும் என்று கேரள நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளபடியே வேதனையை கூட்டத்தான் செய்கிறது.

விவசாயத்திற்கு கூட நீங்கள் தண்ணீர் தர வேண்டாம். குடிப்பதற்காகவாவது தண்ணீர் தாருங்கள் மலையாள சகோதரர்களே...முல்லைப் பெரியாறு அணை உடைய போகிறது என்று நீங்கள் சொல்லி 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இந்த 40 ஆண்டுகளில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் அணை கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

அந்த அணையை நம்பி இருக்கும் ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வழி என்பது உங்கள் பார்வையில் தான் இருக்கிறது. ஒரு கோடி பேருக்கு குடிக்க தண்ணீர் தர மாட்டோம், 10 லட்சம் விவசாயிகளை வாழ விட மாட்டோம் என்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் இருக்கும் சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் வழக்கறிஞர் ரசல் ஜோய் அவர்களே. முல்லைப் பெரியாறு அணையை வாழ விடுங்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 10 குடம் தண்ணீர் சேர்க்க, ஆறு மணி நேரங்களை செலவிடுகிறார்கள். அவர்களின் வலிகளுக்கு பின்னே ஒளிந்திருக்கும் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா உங்களிடம்.? என கூறியுள்ளார்

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!