பெரியாறு அணையில் பெய்த மழையால் தேனி மாவட்ட விவசாயிகள் நிம்மதி

பெரியாறு அணையில் பெய்த மழையால்  தேனி மாவட்ட விவசாயிகள் நிம்மதி

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

முல்லைப்பெரியாறு அணையில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்து தேனி மாவட்ட நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் முதல் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நடவு செய்ய நெல் நாற்றுக்களை பாவினர். நாற்றுக்கள் வளர்ந்து நடவு பருவத்தில் உள்ளன. ஆனால் அணைப்பகுதியில் மழையில்லாமல் நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மழை தொடங்கி உள்ளது. நேற்று பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 37.6 மி.மீ., மழை பதிவானது. தேக்கடியில் 39.4 மி.மீ., மழை பதிவானது. மஞ்சளாறில் 14 மி.மீ., மழை பெய்தது. வீரபாண்டியில் 5.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 2.2 மி.மீ., ஆண்டிபட்டியில் 3.8 மி.மீ., சோத்துப்பாறையில் 5 மி.மீ., வைகை அணையில் 3.2 மி.மீ., போடியில் 5.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.8 மி.மீ., கூடலுாரில் 3.6 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழையால் பெரியாறு அணைக்கு விநாடிக்கு 602 கனஅடி நீர் வரத்து உள்ளது. இன்று மாலைக்குள் நீர் வரத்து விநாடிக்கு ஆயிரம் கனஅடியை தாண்டி விடும். இதன் மூலம் நீர் மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 114.95 அடியாக உள்ளது.

வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை மற்றும் ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையில் மழை பெய்தது தேனி மாவட்ட விவசாயிகளை நிம்மதி அடைய செய்துள்ளது. இன்னும் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவி்த்துள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story