முல்லைப்பெரியாறில் தொடரும் மழையால் 130 அடியை எட்டுகிறது அணை நீர்மட்டம்

முல்லைப்பெரியாறில் தொடரும் மழையால்  130 அடியை எட்டுகிறது அணை நீர்மட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை. பைல் படம்.

மழை தொடர்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 130 அடியை எட்டுகிறது.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் கடந்த ஆண்டு பல மாதங்கள் தொடர்ச்சியாக 130 அடியிலேயே இருந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட உடன் நீர் மட்டம் வேகமாக சரிந்தது. மழையும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 44 மி.மீ., மழை பதிவானது. தேக்கடியில் 13 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால் நீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 3300 கனஅடியை எட்டியது. மழை தொடர்வதால் இன்று மாலைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 3500 கனஅடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 1700 கனஅடி நீர் மட்டுமே தேனி மாவட்டத்திற்கு திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் அடி வரை அதிகமாக இருப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து இன்று காலை 129.05 அடியை எட்டியது. (மொத்த நீர் மட்ட உயரம் 152 அடி). இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அணை நீ்ர் மட்டம் 130 அடியை எட்டி விடும். அல்லது தாண்டி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் அணை நீர் மட்டம் உயர்வதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story