மது அருந்தும் குடிமகன்களால் அவதிக்குள்ளாகும் அரசு கட்டிடங்கள்..!
குடிமகன் (கார்ட்டூன் படம்)
தேனி மாவட்டம் முழுவதும் பல புதுப்பிரச்னைகள் குடிமகன்களால் முளைத்து வருகிறது. குடித்து விட்டு இரவு நேரங்களில் அவர்கள் அமர்ந்து ரிலாக்ஸ் செய்ய அரசு கட்டிடங்களை தேர்வு செய்கின்றனர். அங்கு அமர்ந்து சிலர் குடிக்கின்றனர். ஸ்நாக்ஸ் சாப்பிடுகின்றனர். வாந்தி எடுக்கின்றனர். சிலர் இன்னும் சற்று அதிகமான அசிங்கங்களை செய்கின்றனர். குறிப்பாக போடி புதுாரில் உள்ள ரேஷன் கடை முன்பு தினமும் இரவு நேரத்தில் குடிமகன்கள் கூடி விடுகின்றனர்.
கடையின் முன்புறம் உள்ள தளத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். உணவு, ஸ்நாக்ஸ் சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பின்னர் மீதம் இருக்கும் உணவு, ஸ்நாக்ஸ்களை கடை முன்பே வீசி எறிகின்றனர். சிலர் கடை முன்பு வாந்தி எடுத்து விடுகின்றனர். பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர்.
காலையில் கடை திறக்க வரும் ரேஷன் கடை பணியாளர்கள் இதனை கண்டு மிகவும் சங்கடத்திற்குள்ளாகின்றனர். இதனை சுத்தம் செய்யவே பணியாளர்களுக்கு நீண்ட நேரம் ஆகிறது. அதுவும் உடைந்த பாட்டில்களை பத்திரமாக பொறுக்கி எடுத்து வேறு இடத்தில் போடுவதற்குள் மிகவும் சிரமப்பட்டு விடுகின்றனர். தினமும் நடக்கும் இந்த குடிமகன்கள் தொல்லையால் ரேஷன் பணியாளர்கள் மிகுந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர். போடியில் இரவு ரோந்து வரும் போலீசார் இந்த குடிமகன்களின் தொல்லைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
போலீசார் இரவு ரோந்து செல்லும் போது, தனியாக உள்ள அரசு கட்டங்களை சற்று கண்காணித்து கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோலவே தமிழகம் முழுவதும் பல குடிமகன்கள் பள்ளிக்கூடத்திற்குள் சென்று மது அருந்தும் அருவருப்பான செயல்களையும் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் அரசு சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu