இரண்டு மாதங்களாக குடிநீருக்கு தவிக்கும் மக்கள்
பைல் படம்
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை ஊராட்சி முதலாவது வார்டு பகுதியில் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் வசதி கேட்டு , ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் கண்டித்து மேலும் இப்பகுதிய பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியிடமும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் இவை சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலர்களிடம் முறையிட்ட பொழுது குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தி வந்த (ஆழ்துளை குழாய்களை)போர்களை அலசி உள்ளதால் அவற்றில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அலட்சியமாக பதில் கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவற்றிற்கு மாற்று ஏற்பாடு இன்று வரை இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக அரசுத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது டி. புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் போர் அமைத்து, ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் அவற்றை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றது என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் விரைந்து மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் இப்பகுதி மக்கள் மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதாகவும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே முதலாவது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் மெத்தனப்போக்கு காட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து இப்பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu