ஆளுக்காளு நாட்டாமை? யார் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.,?!!

ஆளுக்காளு நாட்டாமை?  யார் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.,?!!
X

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)

அ.தி.மு.க.,வின் கட்டுப்பாட்டை எடப்பாடி பழனிசாமி இழந்து விட்டாரா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜூன் 2022. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து பிரளயத்தைக் கிளப்பியிருந்த நேரம். “அ.தி.மு.க வலுப்பெற ஒரே வழி, ஒற்றைத் தலைமை தான். அதைத்தான் தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புகிறார்கள்”என அனைவரையும் தாஜா செய்து, கட்சியின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

பொதுச்செயலாளராகவும் தன்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். ‘ஒற்றைத் தலைமை எனும் குதிரையில் ஏறி, கோட்டையைப் பிடித்துவிடலாம்’ எனக் கட்சிக்காரர்களும் கனவில் இருந்தனர். அவர்களின் கனவில் ஒரு லோடு மண்ணைக் கொட்டியிருக்கின்றன நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்!

“டெபாசிட் காலியான ஏழு தொகுதிகள். தென்மாவட்டத் தொகுதிகளில் ஆட்டம் கண்ட வேட்பாளர்கள். தலைநகரில் மண்ணைக் கவ்விய கட்சி. மொத்தமாகவே சறுக்கிய வாக்குவங்கி என அ.தி.மு.க கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது இந்த முறை. ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் உருவெடுத்த பிறகு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் கட்சிக்குத் தோல்வி தான் கிடைத்தது. ஆனாலும், ‘இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயிப்பதில் ஆச்சர்யமில்லை’ என மனதைத் தேற்றிக்கொண்டோம். அதுபோல, நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை எங்களால் கடந்துபோக முடியவில்லை. தொடர்ச்சியாகவே சொதப்பி வருகிறார் இ.பி.எஸ்.

‘அவரால் தேர்தல்களில் வெற்றியைச் சாத்தியமாக்க முடியவில்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கின்றன நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்” எனக் கொதித்துத் தீர்க்கிறார்கள் இலைக் கட்சியின் சீனியர்கள். அ.தி.மு.க-வுக்குள் என்ன தான் நடக்கிறது. எடப்பாடிக்கு என்னதான் ஆச்சு? விரிவாக விசாரித்தோம்.

“சொந்தத் தொகுதியிலேயே கோட்டைவிட்ட இ.பி.எஸ்!”

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளில், 35 இடங்களில் இரட்டை இலைச் சின்னம் போட்டியிட்டது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளில், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க களமிறங்கியது. அவற்றில், தென்சென்னை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது அ.தி.மு.க. 1972-ல் கட்சி தொடங்கப்பட்ட காலம் தொட்டு, இப்படியொரு சரிவைச் சந்திக்காததால், கொதித்துப்போயிருக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “இந்தத் தேர்தலில் வடசென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வாக்குகள் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. குறிப்பாக, வன்னியர் வாக்குகள் அதிகமிருக்கும் சில தொகுதிகளில், பா.ம.க-வைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது அ.தி.மு.க. விருதுநகரில், 4379 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் தான் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறார் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன்.

அதேபோல, நாமக்கல்லில் 29,112 வாக்குகள், கள்ளக்குறிச்சியில் 53,748 வாக்குகள், விழுப்புரத்தில் 70,703 வாக்குகள், சேலத்தில் 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்திருக்கிறோம். இந்த டேட்டாக்களை மட்டும் வைத்துக்கொண்டு, ‘கடந்த தேர்தலைவிட முன்னேற்றம். ஒரு சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் உயர்ந்திருக்கின்றன’ என இ.பி.எஸ் மார்தட்டிக்கொண்டாலும், தொண்டர்கள் யாரும் இதில் மகிழ்ச்சியாக இல்லை.

வேட்பாளர் பட்டியல் வெளியான போதே, கட்சிக்குள் பெரிய அளவில் சலசலப்பு எழுந்தது. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். முன்பின் தெரியாத நபர்களையெல்லாம் வேட்பாளர்களாக முன்னிறுத்தினார் இ.பி.எஸ். ‘வேண்டாங்க... கட்சிக்காரர்களே ஓட்டுப்போட மாட்டாங்க’ என சீனியர்கள் அறிவுறுத்திய போதும், இ.பி.எஸ் அதைச் சட்டை செய்யவே இல்லை.

அதன் விளைவாகத்தான், இ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டத் தொகுதியான சேலத்திலேயே கோட்டை விட்டிருக்கிறது அ.தி.மு.க. சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், தி.மு.க வேட்பாளரைவிட அ.தி.மு.க வேட்பாளரான விக்னேஷ் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இ.பி.எஸ்-ஸின் சொந்தச் சட்டமன்றத் தொகுதியான எடப்பாடியில் மட்டுமே அ.தி.மு.க கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தனது சொந்தத் தொகுதியான தேனியை வென்றெடுத்தார் ஓ.பி.எஸ். அப்போதும் சேலத்தில் இ.பி.எஸ் கோட்டை விட்டார். இப்போதும் சறுக்கியிருக்கிறார். சறுக்கலுக்குக் காரணமானவர்களை இப்போது கூட அவர் கண்டிக்கவும் இல்லை, களையெடுக்கவும் இல்லை. அதற்கான துணிச்சலும் அவரிடம் இல்லை.

2019 தேர்தலில், திருநெல்வேலி வேட்பாளராகக் களமிறங்கிய மனோஜ் பாண்டியன், 3.37 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே தொகுதியில், வெறும் 89,601 வாக்குகளே தற்போது பெற்றிருக்கிறார் கழக வேட்பாளர் ஜான்சி ராணி. தொகுதியில் அவர் அறிமுகம் இல்லாதவர் என்பது ஒருபக்கம் என்றாலும், நெல்லை அ.தி.மு.க-வுக்குள் நடந்த அமைப்புரீதியிலான மாற்றங்களே முதன்மையாகக் கட்சியைக் காவு வாங்கியிருக்கின்றன.

தேர்தலுக்கு முன்பாக, நெல்லை மாவட்ட அமைப்பை இரண்டாகப் பிரித்தார் எடப்பாடி. அப்போதே, ‘நெல்லையில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும்’ என இ.பி.எஸ்-ஸிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அ.ம.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த இசக்கி சுப்பையாவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை அளித்தார் இ.பி.எஸ்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரான இசக்கி சுப்பையாவுக்கு பதவி அளிக்கப்பட்டதால், நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிருப்தி உருவானது. தவிர, ‘சமூகப் பாசத்தில், முக்குலத்தோர் சமூக வாக்குகளை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பக்கம் மடைமாற்றுகிறார் இசக்கி சுப்பையா. அவருடைய ஆதரவாளர்களும் தேர்தல் பணியாற்றவில்லை’ எனப் புகார்கள் எழுந்தும், இ.பி.எஸ் அதைக் கண்டிக்கவில்லை. விளைவு... நெல்லையில் அ.தி.மு.க டெபாசிட்டை இழந்து அவமானப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில், தன் உறவினரான சிவசாமி வேலுமணிக்கு சீட் வாங்கிக்கொடுத்தார் மாவட்டச் செயலாளரான சண்முகநாதன். சிவசாமி, சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், பசையை இறக்குவதில் தயக்கம் காட்டியதாலும் அந்தத் தொகுதியிலும் அ.தி.மு.க-வின் செல்வாக்கு சரிந்தது. தி.மு.க வேட்பாளர் கனிமொழி பலமாக இருந்ததால், டெபாசிட்டும் பறிபோனது. தேனியில் டி.டி.வி.தினகரனும், ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்-ஸும் போட்டியிட்டனர்.

அவர்களை எதிர்த்து, ஸ்டார் வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் எழுந்தது. ஆனால், அங்கேயும் ஒரு முறைகூடத் தேர்தலைச் சந்திக்காதவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தினார் இ.பி.எஸ். அந்த இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்து, ‘முக்குலத்தோர் வாக்குகளைக் கவர வேண்டும்’ என அசைன்மென்ட்டும் அளித்தார்.

ஆனால், ராமநாதபுரத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றுவிட்டார் ஓ.பி.எஸ். முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக விழவில்லை. தேனியிலும் டெபாசிட் பறிபோயிருக்கிறது. தேனி மாவட்டச் செயலாளர்களான ஜக்கையனும், முருக்கோடை ராமரும் அ.தி.மு.க நிர்வாகிகள், அவர்களின் உறவினர்களின் வாக்குகளைக்கூடப் பெற்றுத்தரவில்லை.

‘கன்னியாகுமரியில் அ.தி.மு.க-வுக்கு வாக்குகள் விழாது’ என ஆரம்பத்திலிருந்தே அந்த மாவட்ட நிர்வாகிகள் சுணங்கி விட்டனர். சுணக்கத்தைக் களைந்து, தேர்தல் பணிகளைச் சுறுசுறுப்பாக்கியிருக்க வேண்டிய பொறுப்பாளர் தளவாய் சுந்தரமும், வேட்பாளரான பசலியானுமேகூட சரியாகப் பணியாற்றவில்லை. விளைவு, நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க., டெபாசிட்டைப் பறிகொடுத்திருக்கிறது.

மதுரையில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட சரவணன், தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவி, அங்கிருந்து மீண்டும் தி.மு.க-வுக்கு வந்து, கடைசியாக அ.தி.மு.க-வில் அடைக்கலமானவர். கட்சிக்காரர்களே, அவரை வேற்றாளாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், தனக்குப் போட்டியாக முக்கிய நபர்கள் யாரும் வந்துவிடக் கூடாது என்று, சரவணனை வேட்பாளராக முன்மொழிந்தார் செல்லூர் ராஜூ.

வியூகம் அமைப்பதில் தொடங்கி பசையைப் பட்டுவாடா செய்வது வரையில், அனைத்திலும் குழப்பியடித்தார் செல்லூர் ராஜூ. அவர் மாவட்டச் செயலாளராக இருக்கும் மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், சரவணனைவிட, பா.ஜ.க வேட்பாளர் இராமஸ்ரீநிவாசன் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இப்படி, தென்மாவட்டங்களில் மொத்தமாகவே கழகம் சறுக்கியிருக்கிறது. கட்சியின் இந்தப் பெரிய தோல்வியை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு ‘அனைவரும் ஒன்றுபடுவோம்; கழகத்தை மீட்டெடுப்போம்’ என ஓ.பி.எஸ்., சசிகலா போன்றோரெல்லாம் மீண்டும் இணைப்புக்கு அடிபோடுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் மட்டுமல்ல, தலைநகரிலும் கட்சிக்குப் பெரும் சறுக்கல் தான். வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் வரும் 18 சட்டமன்றத் தொகுதிகளில், 13 தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்றிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க வேட்பாளரும் அந்தத் தொகுதிகளில் மூன்றாமிடமே பெற்றிருக்கிறார்கள்.

தொடக்கத்திலிருந்தே, ‘தலைநகரில் கட்சி நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை. பூத் கமிட்டி அமைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறுகின்றன’ என சென்னை மாவட்டச் செயலாளர்கள்மீது புகார்கள் வாசிக்கப்பட்டன. அந்தப் புகார்களை அப்போதே இ.பி.எஸ் முறையாக விசாரித்திருந்தால், தலைநகரில் கட்சி இவ்வளவு மோசமாகத் தள்ளாடியிருக்காது.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் எனச் சராசரியாக ஆறு பேர்கொண்ட தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார் இ.பி.எஸ். இவர்களெல்லாம் சரியாகத் தேர்தல் பணியாற்றியிருந்தாலே, ஏழு தொகுதிகளில் கட்சியின் டெபாசிட் பறிபோயிருக்கும் அவலம் நடந்திருக்காது. அவர்களை ஒழுங்காகக் கண்காணிக்காத வழிநடத்தாத வகையில், சொதப்பலுக்கு மேல் சொதப்பல் என, கட்சியையே படுகுழியில் தள்ளியிருக்கிறார் இ.பி.எஸ்” என்றனர் ஆதங்கமாக.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, கட்சிக்குள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்வதும், மற்றொருவர் அதை எதிர்ப்பதும் அ.தி.மு.க-வுக்குள் புதிய சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. அதேபோல, வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதாக எடப்பாடி காட்டும் மாய்மாலத்தை நம்பவும் கட்சி சீனியர்கள் தயாராக இல்லை.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “கட்சிக்குள் ஆளாளுக்கு நாட்டாமை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான வேலுமணி, ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 35 சீட்டுகளை வென்றிருப்போம்’ என்று தடாலடிக்கவும், ‘அது அவரது சொந்தக் கருத்து; கட்சியின் கருத்தல்ல’ என விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ‘அ.தி.மு.க ஒரு ராணுவக் கட்டுப்பாடுகொண்ட கட்சி’ என்கிற பெருமையை இழந்து, ‘அ.தி.மு.க இப்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது..?’ என்கிற கேள்வி எழும் நிலைக்குப் போயிருக்கிறது.

2019 தேர்தலின்போது, 22 இடங்களில் போட்டியிட்டு 18.7 சதவிகித வாக்குகளைப் பெற்றோம். தற்போது, புதுச்சேரி உட்பட 35 இடங்களில் இரட்டை இலைச் சின்னம் களமிறங்கியும் 20.46 சதவிகித வாக்குகளையே பெற்றிருக்கிறோம். அதாவது, 13 இடங்களில் கூடுதலாகப் போட்டியிட்டும்கூட, வெறும் 1.76 சதவிகிதம் அளவுக்கே வாக்குகள் உயர்ந்திருக்கின்றன. இது வளர்ச்சியல்ல... வீழ்ச்சி. ஆனால், வாக்கு சதவிகிதம் உயர்ந்துவிட்டதாகத் தன்னையும் ஏமாற்றி, கட்சிக்காரர்களையும் ஏமாற்றிவருகிறார் இ.பி.எஸ்.

தி.மு.க-வுக்கு 6 சதவிகித வாக்குகள் குறைந்திருப்பதாகச் சொல்கிறார் இ.பி.எஸ். அப்படியென்றால், அந்த 6 சதவிகித வாக்குகள் அ.தி.மு.க-வுக்குத்தானே வந்திருக்க வேண்டும்... ஏன் வரவில்லை... தி.மு.க-வுக்கு மாற்றாக அ.தி.மு.க-வையும் இ.பி.எஸ்-ஸையும் வாக்காளர்கள் பார்க்கவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது.

‘தி.மு.க-வுக்காக, உதயநிதி ஸ்டாலின் 90 சதவிகிதத் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். பா.ஜ.க-வுக்கு மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தார்கள். அ.தி.மு.க-வுக்கு நான் மட்டுமேதான் பிரசாரம் செய்தேன்’ என்கிறார் இ.பி.எஸ். இந்தக் கட்சிக்கு இ.பி.எஸ்-தானே பொதுச்செயலாளர்... அவர்தானே பிரசாரம் செய்ய வேண்டும்... தவிர, உதயநிதி பிரசாரம் செய்ததால்தான் தி.மு.க வெற்றிபெற்றது என்றால், உதயநிதியைப் பெரிய தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டரா இ.பி.எஸ்..?

‘கோவையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வேலுமணி செயல்படுகிறார்’ எனக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதை இ.பி.எஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கோவையில் அ.தி.மு.க பெற்ற வாக்குகளை வைத்துப் பார்த்தால், அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகத்தான் தெரிகிறது. இ.பி.எஸ்-ஸின் எந்த வியூகத்தையும் உத்தரவையும் வேலுமணி, தங்கமணியில் தொடங்கி கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் வரை, யாருமே செயல்படுத்தவில்லை. இப்போதும்கூட செயல்படாதவர்களை அழைத்து இ.பி.எஸ் கண்டிக்கவில்லை யென்றால், கட்சியின் பொதுச் செயலாளராக அவர் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு ரொம்பவே தயங்குகிறார் இ.பி.எஸ். ‘நடவடிக்கை எடுத்தால், கட்சிக்குள் கீறல் விழுமோ...’ என்று பயப்படுகிறார். அந்த பயம்தான், உள்ளடி வேலைகள் செய்யும் நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கிறது. ‘இரண்டு கோடி உறுப்பினர்கள்கொண்ட கட்சி’ என்று இனி வெளியே சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், மொத்தமாகவே 88 லட்சம் வாக்குகள் தான் கிடைக்கவே செய்திருக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்து விட்டது. அதிலாவது, கூடுதல் கவனம் செலுத்தி, கட்சியை வெற்றிப்பாதைக்கு இ.பி.எஸ் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், அ.தி.மு.க கதி, அதோகதிதான்” என்றார்கள்.

அ.தி.மு.க எனும் இயக்கத்தின், ஒற்றைத் தலைமையாக ஆசைப்பட்டு, அதை அடைந்தும் விட்டார் எடப்பாடி. ஆனால், ‘அந்தப் பொறுப்புக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை’ என்பதையே தேர்தல் ரிசல்ட்டும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் காட்டுகின்றன. இன்னமும் கட்சியைத் தன் கட்டுக்குள் கொண்டுவரவே முடியவில்லை எடப்பாடியால்.

தொடர்ந்து தவறான வியூகங்களை வகுத்து வருகிறார் எடப்பாடி. மார்தட்டிக்கொண்ட அளவுக்குக் கூட்டணியை அமைக்க முடியவில்லை. தொடர் தோல்விகளில் அவர் பாடம் கற்கவில்லை. சமூகரீதியிலான பிரதிநிதித்துவம் குறித்து யோசிக்காமல், கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கிறார். கட்சிக்குள் நடக்கும் பூசல்கள், பிரச்னைகள், உள்ளடிகள் குறித்துக் கண்டுகொள்வதே இல்லை. பிரச்னைக்குரிய ஆட்களைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ இல்லை.

நாட்டில் நடக்கும் முக்கிய மக்கள் பிரச்னைகளின்போது பொறுப்பாகக் குரல் கொடுக்காமல், மௌனமாக இருக்கிறார். முக்கியப் போராட்டங்கள் எதையும் கடந்த சில ஆண்டுகளாக அவர் முன்னெடுக்கவில்லை. பா.ஜ.க-வுடனான கூட்டணியில் தெளிவில்லாமல் அவர் குழப்பியதில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது அ.தி.மு.க. இன்று வரையிலும்கூட மோடியை விமர்சித்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத நிலையில்தான் இருக்கிறார்.

தி.மு.க-வுடன் யானை பலத்தோடு மோதிய அ.தி.மு.க-வை, தனது தவறான, பலவீனமான முடிவுகளால் பா.ஜ.க-வோடும், நாம் தமிழர் கட்சியோடும் தேர்தலில் போராட வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இதனால், எதிர்க்கட்சி என்கிற கௌரவத்தை இழந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. இதேபோல எடப்பாடி தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க எனும் கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்துவிடும்” என்று கவலைப்படுகிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!