ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சாதீர்: பில்கேட்ஸ் அடுக்கும் காரணங்கள்

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சாதீர்:  பில்கேட்ஸ் அடுக்கும் காரணங்கள்
X

பில் கேட்ஸ்

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சவேண்டாம் என தொழிலதிபர் பில் கேட்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கல்லூரி பயிலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றுவோர் அதனை தங்களது போட்டியாளர்களாக பார்க்கலாம். அதுவே டெக் வல்லுநர்கள், மனித வாழ்வினை மேலும் ஸ்மார்ட் ஆக்கும் கருவியாக அதனைப் பார்க்கலாம். இத்தகையச் சூழலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பார்க்கிறார் என்பதை பார்க்கலாம்.

20-ம் நூற்றாண்டில் கணினி சார்ந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்டவர்களில் பில் கேட்ஸும் ஒருவர். உலகம் முழுவதும் பரவலாக அறியப்படுகின்ற நபர். முக்கியமாக அவரது நிறுவனத்தின் விண்டோஸ் தான் உலக மக்களின் பார்வையை விரிவு செய்ய உதவி வருகிறது. 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த விதையை தூவிய நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட்டின் பணி கவனிக்கத்தக்கது. இப்படியாக பல காரணங்களை சொல்லலாம். இந்நிலையில், ஏஐ குறித்து தனது வலைப்பதிவில் அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் மிகவும் விரிவானது. இனி பில் கேட்ஸ் தொடர்கிறார்.

செயற்கை நுண்ணறிவின் காலம்: ‘எனது வாழ்நாளில் தொழில்நுட்பம் சார்ந்து ஏராளமான டெமோக்களை பார்த்துள்ளேன். அதில் இரண்டு எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த இரண்டும் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவை. விண்டோஸ் உட்பட அனைத்து நவீன ஆப்ரேட்டிங் சிஸ்டங்களுக்கும் முன்னோடியாக திகழும் கிராபிகல் யூஸர் இன்டர்ஃபேஸ் அதில் ஒன்று. அதன் அறிமுகத்தை 1980-களில் நான் பெற்றேன். சார்லஸ் சியோனி எனும் புரோகிராமர் அப்போது அதன் டெமோவை எனக்கு நிகழ்த்தி காட்டி இருந்தார். அதன் ஊடாக கணினியை கொண்டு என்னென்ன செய்ய முடியும் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். அதுவே அப்போது எங்கள் நிறுவனத்தின் அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்க காரணமாகவும் அமைந்தது.

அதற்கடுத்து, டெக் உலகில் நான் எதிர்கொண்ட இரண்டாவது சர்ப்ரைஸ் 2022-ல் நடந்தது. 2016-ம் ஆண்டு முதல் முதலாக ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் அணியினரை நான் சந்தித்து இருந்தேன். தொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்களது பணியைக் கண்டு வியப்படைந்தேன். அதோடு அவர்களுக்கு ஒரு சோதனையும் வைத்தேன். Advanced Placement Biology தேர்வில் ஏஐ பாட் பதில் அளித்து, தேர்வில் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்பது நான் கொடுத்த டாஸ்க். இதைச் செய்ய அவர்களுக்கு எப்படியும் சில ஆண்டுகள் எடுக்கும் என கணித்தேன். ஆனால், அவர்கள் அடுத்த சில மாதங்களில் என்னை அணுகினார்கள். மல்டிபிள் சாய்ஸ் முறையிலான தேர்வில் 60-க்கு 59 மார்க் பெற்றது ‘ஜிபிடி’. மேலும், சில கேள்விகளுக்கு விரிவாக பதிலும் அளித்தது. அதன்பிறகு விஞ்ஞானத்துக்கு துளியும் தொடர்பு இல்லாத கேள்விகளை முன்வைத்தோம். அந்த அறையில் இருந்தவர்கள் அதற்கு என்ன பதில் சொல்லி இருப்பார்களோ அதையே ஜிபிடி-யும் சொல்லி இருந்தது. அது ஜெனரேட்டிவ் ஏஐ வகையறாவின் அட்வான்ஸ்டு டெமோ. அது எங்களை ஆச்சரியமடைய செய்தது.

பர்சனல் கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் போன் முதலியவை எந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதோ அதே நோக்கத்தின் கீழ் தான் ஏஐ-யும் தொழில்நுட்ப உலகில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் துணையோடு வேலை, கற்றல் முறை, பயணம், தகவல் தொடர்பியல் போன்றவற்றில் பெரிய மாற்றம் நிகழ உள்ளது. முக்கியமாக, உலக அளவில் பல்வேறு தரப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஏஐ களையும் என கருதுகிறேன். அது எப்படி இருக்கும் என சில நேரங்களில் யோசித்தும் பார்க்கிறேன். நிச்சயம் ஏஐ அந்த ட்ரெண்டை உருவாக்கும். கல்வி தொடங்கி காலநிலை மாற்றம் வரை ஏஐ உதவும்.

எந்தவொரு தொழில்நுட்பமும் மக்களிடையே பொது வெளியில் அறிமுகமாகும்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் தொடக்க நாட்களில் மக்களை அச்சுறுத்தவே செய்யும். ஏஐ-யும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பணிப் பாதுகாப்பு, சட்ட நெறிமுறை, பிரைவசி மற்றும் பல என ஏஐ பல்வேறு விஷயங்களில் மக்களை அச்சுறுத்தி உள்ளது. சமயங்களில் தவறான தகவலை கூட ஏஐ பதிலாக தரலாம்.

தொழில்நுட்ப துறையின் நெடுநாள் கனவு: ஏஐ மற்றும் ஏஜிஐ வடிவமைப்பு என்பது கணினி சார்ந்த தொழில்நுட்ப துறைக்கு நெடுநாள் கனவு என சொல்லலாம். அது எப்படி என்றால், மனிதர்களை விடவும் எந்திரங்கள் எப்போது ஸ்மார்ட் ஆகும் என்ற கேள்வி இங்கே சில தசாப்தங்களாக வினவப்பட்டு வருகிறது. மெஷின் லேர்னிங் மற்றும் அதி திறன் வாய்ந்த கணினி சக்தியின் மூலமாக இது சாத்தியமாகி உள்ளது. அதற்கான வேலை வேகமாக நடந்து வருகிறது. வெகு சில நாட்களில் கணினி உலகம் இரண்டாக அடையாளம் காணப்படும். அது ஏஐ-க்கு முந்தைய காலம் மற்றும் பிந்தைய காலம் என அறியப்படும்.

கணினி பயன்பாட்டில் மாற்றம்: எப்படியும் வரும் நாட்களில் நமது கணினி பயன்பாடும் மாற்றம் காணும். அதற்கான வேலையை ஏஐ செய்யும். இப்போது கணினியில் டாஸ்குகளை மேற்கொள்ள சில கட்டளைகள் உள்ளிட வேண்டி உள்ளது. டெக்ஸ்ட் சார்ந்த டிராஃப்ட் பணிக்கு மைக்ரோசாஃப்ட் வோர்ட் அல்லது கூகுள் டாக்ஸ் போன்றவற்றை பயனர்கள் பயன்படுத்தலாம். ஆனால், எந்திரத்தால் தானாகவே ஒரு மின்னஞ்சலை அனுப்பவோ, செல்ஃபியை பகிரவோ, ஒரு டேட்டாவை ஆராயவோ, சினிமா டிக்கெட் புக் செய்யவோ அல்லது மீட்டிங் ஷெட்யூல் செய்யவோ முடியாது. இந்தப் பணிகளை செய்ய மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது.

அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். வெவ்வேறு பணிகளை செய்ய பல்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. அதை எளிய மொழியில் உங்கள் டிவைஸ்களிடம் சொன்னால் போதும். அந்த வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும். குறிப்பாக, ஆன்லைனில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனல் அஸிஸ்டன்ட் எனும் யதார்த்த விஷயம் ஏஐ மூலம் சாத்தியமாகி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ‘The Road Ahead’ புத்தகத்தில் இது குறித்து சொல்லி இருந்தேன். இதில் பிரைவசி சார்ந்த சிக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஏஐ மூலம் ஏற்படும் ரிஸ்க் மேனெஜிபிள் தான் ஏஐ ஏற்படுத்தி உள்ள அச்சுறுத்தல் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. உலகில் மோட்டார் கார் அறிமுகமான போது விபத்து குறித்த அச்சுறுத்தலும் எழுந்தது. அதற்காக கார்களை தடை செய்யவில்லை. மாறாக, வேக கட்டுப்பாடு, சாலை விதிமுறை, பாதுகாப்பு வழிகள் போன்றவற்றை ஏற்படுத்தினோம். அதுபோல மெஷின் காரணமாக மனிதர்களுக்கு வேலை இழப்பு அபாயம், தேர்தல் முடிவுகளில் தாக்கம், பூவுலகில் மனிதர்களே வேண்டாம் என ஏஐ திறன் பெற்ற கருவிகள் நினைத்தால் என்னவாகும் என பலவிதமாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதெல்லாம் நியாயமான கேள்வி தான். ஆனால், இதனை மனித குலம் திறம்பட கையாளும் திறனை பெற்றுள்ளது. இதற்கு முன்பும் மோட்டார் கார் போல பல விஷயங்களை நாம் எதிர்கொண்டு உள்ளோம். அதை திறம்பட கையாண்டும் உள்ளோம். ஏஐ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நாம் அதன் ஆரம்பக்கட்டத்தில் உள்ளோம். இது மோட்டார் கார்களுக்கு ஏற்படுத்தியது போன்ற விதிகளை ஏற்படுத்துவதற்கு முந்தைய காலம். அதி விரைவாக ஏஐ மாற்றம் கண்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை. இப்போதைக்கு சமூகத்தில் அதை தனிநபர்கள் கையாளும் விதத்தின் காரணமாக, அது சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. நிச்சயம் இதற்கு தீர்வு காணப்படும்.

மருத்துவம், கல்வி, காலநிலை என பல துறைகளில் ஏஐ நமக்கு உதவ உள்ளது. ஏஐ சார்ந்த ஆதாயம் குறித்து நான் நிறைய சொல்வேன். ஆனால், இது அதற்கான நேரம் அல்ல. டீப்ஃபேக், தனிநபர் தாக்குதல், பாதுகாப்பு அச்சுறுத்தல் என ஏஐ சார்ந்த அச்சுறுத்தல்கள் தற்போது நிலவி வருகிறது. இதனை முறையான தொழில்நுட்ப சட்ட விதிமுறை மூலமாக அரசு நெறி செய்யலாம். இதில் உலக நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். தனியார் துறைக்கும் இதில் பங்கு உள்ளது. அது பிரைவசி, தனிநபர் பாதுகாப்பு, பொறுப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. இறுதியாக மீண்டும் இதை சொல்லிக் கொள்கிறேன் ஏஐ மூலம் ஏற்படும் ரிஸ்க் ‘மேனெஜிபிள் தான்’ என்று அழுத்தமாகவும் நம்பிக்கையுடன் சொல்கிறார் பில் கேட்ஸ்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!