நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்: ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை
வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆட்சியர் சஜீவனா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.
தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமானதாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைப் புறம்போக்குகளான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவர் - சிறுமியர் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெச்சரிக்கை விளம்பர பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும்.
பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவிகள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 04546-1077 கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், கால்நடைகள் பாதிக்கப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தால் கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவக்குழுவினர் அவசரகால ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கே வந்து கால்நடைகளை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இந்த தகவல் பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் படி விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சமர்தா ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, வருவாய் கோட்டாட்சியர்கள் பால்பாண்டி (உத்தமபாளையம்), முத்துமாதவன் (பெரியகுளம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu