தேனி மேகமலைக்கு பொருந்துமா? தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு

தேனி மேகமலைக்கு பொருந்துமா?  தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு
X

பைல் படம்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தேனி மேகமலைக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புக்சாவில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்திற்குள் இருந்த 37 வனகிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றி மம்தாபானர்ஜி தலைமையிலான அரசு உத்தரவிட்டது. தவிர இந்த வனப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் உள்ளன.

தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் கிழக்கு மண்டல அமர்வு வனகிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அங்கு வர்த்தக ரீதியான கட்டடங்கள் மட்டும் இயங்க அனுமதிக்க முடியாது. இந்த வனப்பகுதிக்குள் உள்ள ஓட்டல்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்களை இரண்டு மாதங்களுக்கு வன பயிற்சி மையங்களாக மாற்ற வேண்டும் அல்லது இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதே பிரச்னை தேனி மேகமலையிலும் உள்ளது. மேகமலையில் உள்ள வனகிராமங்களை தமிழக அரசு மம்தாபானர்ஜி அரசு பாணியில் வருவாய் கிராமங்களாக மாற்றி மக்களை வெளியேற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதேசமயம் வணிக ரீதியாக மேகமலைக்குள் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள், உணவு விடுதிகள், சொகுசு விடுதிகள், தங்குமிடங்கள், சட்டப்புறம்பான எஸ்டேட்டுகளை அகற்றியே ஆக வேண்டும். ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவரே இங்கு நடைபெறும் சட்ட விரோத செயல்களுக்கு உறுதுணையாக உள்ளார். இதனை தடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

மேகமலை வனப்பகுதிக்குள் வணிக ரீதியாக இயங்கும் அனைத்தையும் முற்றிலும் தடை செய்து விட்டால், இந்த உத்தரவை காரணம் காட்டி மலைக்கிராம மக்களை பாதுகாக்க முடியும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil