தேனி அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவப்பிரிவு தொடங்கப்படுமா ?
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் ஆயுர்வேத மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆயுர்வேத மருத்துவப்பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் கலெக்டர் ஷஜீவனாவிற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 22.08.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக தொடக்கி வைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை பிரிவில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இரண்டு மருத்துவமுறை மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா , ஓமியோபதி ஆகிய ஐந்து மருத்துவ முறைகளை உள்ளடக்கிய இந்திய மருத்துவ துறை என்ற போதிலும் தற்போது தேனி மற்றும் திருவண்ணாமலையில் துவக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதியுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனையில் பிற மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மருத்துவ முறைகளும் தனக்கான மருத்துவ சிறப்பம்சங்களை கொண்டுள்ளதன் காரணமாகவே பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவமனை உருவாக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் திட்டமிடப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 50 படுக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை கட்டிடத்தில் சித்தா,யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பிற மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவம் திட்டமிட்டே புறக்கணிக்கபட்டுள்ளன.
எனவே அனைத்து ஆயுஷ் மருத்துவத்திற்கும் தனித்தனியே படுக்கை வசதிகளை கொடுத்து மேற்கண்ட மருத்துவ முறைகளின் பங்களிப்பு பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக அந்தந்த மருத்துவமுறைகளையும் ஏற்படுத்திட வேண்டும்.
மேலும் தேனி மாவட்ட மக்கள் ஆயுர்வேத பஞ்சகர்ம சிறப்பு சிகிச்சை பெற வேண்டுமானால் தற்போதைய சூழலில் சென்னை மற்றும் நாகர்கோவில் வரை பயணம் செய்து அங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இம்மாவட்ட மக்களுக்கு பொருள் விரயம் மற்றும் அதிகப்படியான கால விரயம் ஏற்படுகிறது.
இவற்றை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்த 50 படுக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவ பிரிவு தொடங்கிட தக்க நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட மக்கள் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu