திராவிட மாடல் என்ன தெரியுமா? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திராவிட மாடல் என்ன தெரியுமா? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
X

தேனியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அனைவருக்குமான வளர்ச்சி, தனிமனித தேவைகளை பூர்த்தி செய்வது தான் திராவிட மாடலான எனது அரசின் முதல் குறிக்கோள்- முதல்வர் ஸ்டாலின்.

தேனியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா, முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் 114.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 10 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசியதாவது: தேனி மாவட்டம் மிகவும் அழகிய மாவட்டம். வைகை அணை, மேகமலை, வெள்ளிமலை, போடி மலை, கும்பக்கரை அருவி, சுருளிஅருவி, கண்ணகி கோயில் போன்ற இயற்கை வளங்களையும், வரலாற்று சின்னங்களையும் பெற்றது. நான் பதவியேற்று ஒரு ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக இதுவரை மக்களை நேரடியாக சந்திப்பதில் இடையூறு இருந்தது. இப்போது மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் சென்று வருகிறேன். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தேனிக்கு வந்துள்ளேன்.

தேனி மாவட்டத்தில் தி.மு.க., எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. (மிகப்பெரிய சாதனை பட்டியல் வாசித்தார்). இவையெல்லாம் செய்து முடிக்கப்பட்ட பணிகள். இனி செய்யப்போகும் பணிகளையும் நான் அறிவிக்கிறேன். பெரியகுளம் அரசு மருத்துவமனை 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மஞ்சிநாயக்கன்பட்டி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டியில் வைகை உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும். கம்பத்தில் நவீன நெல் அரிசி ஆலை அமைக்கப்படும். நரிக்குறவர் காலனியை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். குமுளி பஸ்ஸ்டாண்ட் 7.5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மக்களுக்கு உழைப்பது மட்டுமே என் வேலை. தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லமாட்டேன். இந்த மேடையை அரசியல் மேடையாக மாற்ற மாட்டேன். எனது தந்தையும், தமிழக முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த பெருமை அவரது மகனான எனக்கு கிடைத்தது. இதற்கு பா.ஜ., கூட ஆதரவு வழங்கியது. ஆனால் சிலர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அனைத்து துறைகளிலும் சிறந்த தமிழ்நாடு. அனைவருக்கும் நல்வாழ்வு. அனைவருக்குமான வளர்ச்சி. தனிமனித தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்தல் என்பதே எனது திராவிட மாடல் அரசின் குறிக்கோள். இது மக்களுக்கான அரசு. இந்த திரவிடமாடல் தான் எனது தனிமாடல் ஆகும். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture