தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம்: வனத்துறை எச்சரிக்கை
பைல் படம்.
தேனி மாவட்டம் முழுக்க மலை மாவட்டம் ஆகும். தேனி மாவட்டத்தில் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை வி வடிவில் பிரிந்து காணப்படும். அதாவது தேக்கடி, கண்ணகி கோயில் மலைப்பகுதியில் இருந்து சுருளி அருவி, மேகமலை, வருஷநாடு மலை, வெள்ளிமலை என ஒரு பிரிவும், கம்பம், கம்பம் மெட்டு, தேவாரம், போடி, போடி மெட்டு, பெரியகுளம், கும்பக்கரை, கொடைக்கானல் என ஒரு பகுதி பிரிந்தும் இருக்கும். இடைப்பட்ட பகுதிக்குள் தான் தேனி மாவட்டத்தின் 80 சதவீத நிலப்பரப்பு அடங்கி உள்ளது.
இதனால் தேனி மாவட்டத்தை கம்பம் பள்ளத்தாக்கு எனக்கூறுவார்கள். இதுவரை மேகமலையில் பசுமை வனப்பகுதிகள் அதிகம் உள்ளதால் பெரிய அளவில் காட்டுத்தீயால் சேதம் வரவில்லை. ஆனால் குமுளி முதல் போடி வரை உள்ள மலைப்பகுதிகளில் காய்ந்த வனப்பகுதிகள், புற்கள் நிறைந்த பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு திடீர், திடீர் என காட்டுத்தீ பற்றிக் கொள்கிறது.
வெயிலின் தாக்கம் காரணமாகவே காட்டுத்தீ அதிகம் பற்றிக் கொள்கிறது. ஒருமுறை காட்டுத்தீ பற்றினால் அணைக்க ஒரு வாரம் வரை ஆகி விடுகிறது. இந்த ஆண்டு வனத்துறை சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு கோடுகளும் போடப்படவில்லை என்றே தெரிகிறது.
காட்டுத்தீயை அணைக்க தேனி மாவட்ட வனத்துறையிடம் எந்த வித உபகரணங்களும் இல்லை. இதனால் தீ பற்றினால் சில சமயம் தானாகவே அணைந்தால் மட்டுமே சாத்தியம். இனி மேல் நாளுக்கு நாள் கோடை வெயிலில் தாக்கம் அதிகரிக்கும். எனவே காட்டுத்தீ அதிகம் பரவும். மக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். குறிப்பாக சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu