தேனி தேர்தல் ரேஸ்..! நான்கு கால் பாய்ச்சலில் தி.மு.க...!

தேனி தேர்தல் ரேஸ்..!  நான்கு கால் பாய்ச்சலில் தி.மு.க...!
X

தேனி தேர்தல் களத்தில் நான்கு கால் பாய்ச்சலில் பறக்கும் திமுக 

தேனி லோக்சபா தேர்தல் களத்தில் தி.மு.க.,வின் பிரசார வேகத்தை கண்டு அத்தனை பேரும் கலங்கிப்போய் உள்ளனர்.

தேனி லோக்சபா தேர்தல் களம் மிகவும் கடுமையாக உள்ளது. தி.மு.க., சார்பில் தங்க.தமிழ்செல்வன், பா.ஜ.க., கூட்டணியில் டி.டி.வி., தினகரன், அ.தி.மு.க., கூட்டணியில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேனி மாவட்டத்தில் தி.மு.க.,வில் மிக, மிக வலுவான கோஷ்டி பூசல் உள்ளது.

தவிர தி.மு.க.,வில் தங்க.தமிழ்செல்வன் வேண்டாம் என்று சொல்லி வந்த தலைவர்கள், தொண்டர்களே அதிகம். இதனை உணர்ந்த தங்க.தமிழ்செல்வன் தன் தலைமையிடம் முழு உண்மைகளையும் புட்டு, புட்டு வைத்தார். என்னை வேட்பாளராக நிறுத்தினால் என்னென்ன வகையில் மேலிடம் தனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்பதை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசி விட்டார்.

தி.மு.க.,வில் வேட்பாளராக கிடைப்பது பெரும் பாக்கியம் என்று பலரும் நினைக்கும் நிலையில், தங்க.தமிழ்செல்வன் முழு உண்மைகளையும் கூறி தன் நிலை பற்றி முழுமையாக விளக்கியதால் தொடக்கத்திலேயே தி.மு.க., தலைமை விழித்துக் கொண்டது.குறிப்பாக முதல்வர் ஸ்டாலினே சாட்டையை சுற்றினார்.

அவர் முதலில் வெளுத்தது தேனி மாவட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகிகளைத் தான். அதோடு நிறுத்தி விடவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் நம்பிக்கையான மேலிட பொறுப்பாளர்களை நியமித்து தினமும் பிரசார நிலவரம், கட்சி நிலவரம், மக்கள் மனநிலை, இதர விவரங்கள் பற்றி தனக்கு அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் கோபத்தை கண்ட தேனி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமை தேனி மாவட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டது. இனிமேல் நாம் சரியாக இருந்தால் மட்டுமே பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். முழு வீச்சில் களத்தில் இறங்கி விட்டனர்.

தவிர தங்க.தமிழ்செல்வனுக்கு ஆளும் கட்சி வேட்பாளர், வலுவான கூட்டணி வேட்பாளர், தி.மு.க., தலைமையின் முழுமையான அன்பை பெற்ற வேட்பாளர் என பல தகுதிகள் சேர்ந்து விட்டனர். இதனால் தேனி மாவட்ட தி.மு.க., இதுவரை இல்லாத வேகத்தில் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக எதிர்த்து நிற்பது சாதாரண வேட்பாளர் இல்லை. டி.டி.வி., தினகரன் தேர்தல் வேலைகளில் உண்மையான சூரப்புலி. அவரிடம் பாடம் படித்தவர் தான் தங்க.தமிழ்செல்வன். இதனால் தேர்தல் வியூகத்தில் தி.மு.க., தேனி தொகுதியில் இதுவரை இல்லாத வேகம் காட்டுகிறது.

வேட்பாளர்களின் ஓட்டு சேகரிப்பு, முக்கிய தலைவர்களின் பிரசார சுற்றுப்பயணம், தி.மு.க., நிர்வாகிகளின் பிரசார வேட்டை, வீடு, வீடாக, தெருத்தெருவாக, கிராமம், கிராமமாக, நகர்புறங்களின் முக்கிய இடங்கள் என எங்கு திரும்பினாலும் தி.மு.க., தலைகளை மட்டுமே காண முடிகிறது. எந்த பிரச்சார சத்தம் கேட்டாலும் அது தி.மு.க., பிரச்சார சத்தமாகவே உள்ளது.

இப்போதே தி.மு.க., மூன்று சுற்று பிரசாரத்தை முடித்து விட்டது. இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தேனியில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வரும் போது, நேரடியாக விளக்கம் கேட்பார். அப்போது பதில் சொல்ல தான் செய்த வேலைகளை பட்டியலிட வேண்டும் என்பதற்காகவே மாவட்ட செயலாளர் முதல், சாதாரண கிளைக்கழக நிர்வாகிகள் வரை தேர்தல் களத்தில் பரம்பரமாக சுற்றி, தாங்கள் பிரசாரம் செய்த ஆடியோ, வீடியோ ஆவணங்களையும், போட்டோக்களையும் சேகரித்து வைக்கின்றனர். இப்படி ஆதாரத்துடன் நிருபித்தால் மட்டுமே முதல்வரிடம் இருந்து தப்ப முடியும்.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவை கண்டு அ.தி.மு.க.,வினர் எப்படி நடுங்கி கிடந்தார்களோ, அதே அச்சம் தற்போது தி.மு.க.,வில் உள்ளது. முதல்வர் ஸ்டாலினை கண்டு ஒட்டு மொத்த தி.மு.க., நிர்வாகிகளும் நடுங்கிக் கிடக்கின்றனர். இப்போது தி.மு.க.,வினர் காட்டும் அசுர பிரசார வேகத்தை இதுவரை தேனி மாவட்டம் சந்தித்தது இல்லை என நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் வியக்கின்றனர்.

அந்த அளவுக்கு தி.மு.க., நான்கு கால் பாய்ச்சலில் பிரசாரக்களத்தில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத துாரத்தில் ஓடிக்கொண்டுள்ளது என்பது மறுக்கவே முடியாத களத்தின் உண்மையாகும். இதேபோல் தி.மு.க.,விற்கு விடுதலை சிறுத்தைகளின் சப்போர்ட் பெரும் பலம் சேர்க்கிறது. அவர்கள் தி.மு.க.,விற்கு இணையாக வலுவாக உழைத்து வருகின்றனர்.

அதேநேரம் தேர்தல் பிரசார களத்தில் டி.டி.வி., தினகரன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார். டி.டி.வி., கட்சிக்கு தேனி மாவட்டத்தில் கட்டமைப்பு எதுவும் இல்லை. ஒரு சில முக்கிய பதவிக்கு மட்டும் ஆட்கள் உள்ளனர். தி.மு.க., போல் வார்டு வாரியாக, கிராம் வாரியாக அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லை.

பா.ஜ.க.,வினர் யாரும் தினகரனுக்காக களத்திற்கு வந்தது போல் தெரியவில்லை. தினகரன் எங்கு செல்கிறார். என்ன செய்கிறார் என்பது அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரியவில்லை. கிட்டத்தட்ட தினகரன் பெரிய அரசு பலம் கொண்ட யானை இந்த தேர்தல் களத்தில் இதுவரை படுத்து தான் கிடக்கிறது. அது எப்போது எழுந்து ஓடும் என்பது அந்த கட்சியினருக்கும் தெரியவில்லை. கூட்டணி கட்சியினருக்கும் தெரியவில்லை.

எல்லாவற்றையும் விட அப்பாவி அ.தி.மு.க., வேட்பாளர். அ.தி.மு.க.,விற்கு யார் வேட்பாளர் என்ற விவரமே இன்னும் மக்களிடம் சென்று சேரவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான உண்மை. இதனை அ.தி.மு.க.,வினர் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவி்ட்டாலும் உண்மையான கள நிலவரம் இது தான். இரட்டை இலை சின்னம் தான் அ.தி.மு.க,, வேட்பாளரை பாதுகாக்க வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க அ.தி.மு.க., எந்த முனைப்பும் காட்டவில்லை. தேனி நகரத்தில் நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் போராடி வருகிறார். அவருக்கு இதர நிர்வாகிகளின் ஒத்துழைப்பு முழுஅளவில் கிடக்கிறதா என்பது சந்தேகமே. தவிர மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் பிரசாரமும் செய்ய வேண்டும். அது யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பாக தினகரனை எதிர்த்து பிரசாரம் செய்கிறோம் என்பது தெரியக்கூடாது என்பதில் பெரும் கவனமாக உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் பிரசார களத்தில் அ.தி.மு.க., இப்போதைக்கு 3வது இடத்தில் தான் உள்ளது என்பதும் உண்மை.

ஆனால் இப்போது ஓடுவது எல்லாம் டிரெய்லர் தான். உண்மையான ரேஸ் 10ம் தேதி முதல் 17ம் தேதி பிரசாரம் முடியும் வரை நடக்கும். அந்த ஒரு வாரத்தில் எங்களை பற்றி பாருங்கள்... என அ.ம.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் கூறி வருகின்றனர். அதற்குள் தி.மு.க., இன்னும் ஐந்து ரவுண்டு பிரசாரத்தை முடித்து விடும் என்பது அவர்களுக்கு எப்படி புரியப்போகிறதோ தெரியவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags

Next Story