கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்..!
தேனியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையினை கலெக்டர் சஜீவனா தொடங்கி வைத்தார்.
தேனி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு, நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணம்.
கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, ஆர்கானிக் புடவை இரகங்கள். காஞ்சிபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்புவனம் பட்டு. கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள், கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், காஞ்சி காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி (Linen/Cotton) சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் இரண்டு விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் தேனி விற்பனை நிலையம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.47.85 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் ரூ.95.00 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் நெசவாளர்களின் நலன் கருதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது, கோ-ஆப்டெக்ஸ் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் எஸ்.சந்திரசேகரன் மற்றும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu