நெருக்கடியிலும் நிதானம் : "சபாஷ்" தேனி காவல்துறை..!
தேனியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வல கூட்டத்தில் சிறு பகுதி. இந்த கூட்டம் சுமார் நான்கு கி.மீ.வரை நீண்டிருந்தது.
தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சிலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சிலைகளின் எண்ணிக்கை பல நுாறுகளை கடந்திருந்தது. ஒவ்வொரு சிலைக்கும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டனர்.
சிலை, பந்தல், மைக் செட், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம், அன்னதானம், வாகனம், ஜெனரேட்டர், ஒலிபெருக்கி என செலவுகள் மிகவும் அதிகமாக இருந்தன. இந்த செலவுகளை பொதுமக்கள் தங்கள் பங்குத்தொகை மூலம் ஈடுகட்டியிருந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் தேனி மாவட்டத்தில் விநாயகர்சிலை வைத்து கொண்டாட குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் வரை மக்கள் செலவிட்டிருப்பார்கள்.
இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் இந்த விழாக்களில் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். ஒவ்வொரு இடத்திலும் ஆடல், பாடல், விளையாட்டு போட்டிகள் களை கட்டியது. சின்னமனுாரில் மூன்று நாட்கள் இடைவிடாத அன்னதானம் நடந்தது. அந்த அளவு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாக்குழுவினர் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டனர். போலீசாரும் மிகுந்த பக்குவத்துடன் நடந்து கொண்டனர். மாவட்டத்தில் எந்த இடத்திலும் சிறு மோதல் கூட வரவில்லை.
மறியல் - சமயோசிதமாக செயல்பட்ட காவல்துறை
தேனியில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும் போது, மைக் செட் கட்டக்கூடாது என போலீசார் தடை விதித்தனர். இதனை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் அனைவரும் சிலைகளுடன் மறியலில் அமர்ந்தனர்.
ஒரு சில நிமிடங்களில் நிபந்தனைகளுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தலாம் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே அனுமதி வழங்கி நிலைமையினை சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார். சினிமா பாடல்கள் போடாமல் பக்தி பாடல்கள் மட்டுமே ஒலிபெருக்கியில் போடவேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தார். அதை ஊர்வலத்தினரும் ஏற்றுக்கொண்டனர். எஸ்.பி.,யின் இந்த பண்பு நிறைந்த சமூக அக்கறை கொண்ட புத்திசாலித்தனமான அணுகுமுறை அத்தனை பேரையும் பாராட்ட வைத்து விட்டது.
பல லட்சம் பேர் ரோட்டில் திரண்டு நான்கு கி.மீ., துாரம் வரை ஊர்வலம் என நிற்கும் போது, போலீசார் சற்று பிடிவாதம் காட்டியிருந்தாலும் நிலைமை சிக்கலாகியிருக்கும். அதே நேரத்தில் பிடிவாதம் காட்டாமல் விட்டுக் கொடுத்த போலீசார், நிலைமையை தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். இந்த அணுகுமுறை மிகவும் சிறப்பானது என அத்தனை பேரும் பாராட்டினர். தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர்சதுர்த்தி விழா ஊர்வலங்களில் குழப்பம் நடந்த நிலையில் தேனி மாவட்டத்தில் எந்த குழப்பமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் டென்சன் மிகுந்த பகுதிகளான சின்னமனுார், கம்பத்திலும் ஊர்வலம் மிகவும் நல்லமுறையில் நிறைவடைந்தது. போலீசார் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் பிரச்னையை சரி செய்து விட்டனர் என ஒட்டுமொத்த தேனி மாவட்ட மக்களும் இதற்காக பாராட்டு தெரிவித்தனர்.
தேனி காவல்துறைக்கு ஒரு "சபாஷ்", ஒரு "சல்யூட்"..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu