தமிழக பகுதிக்குள் டிஜிட்டல் சர்வே ? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
பைல் படம்
கேரள அரசு தமிழக எல்லையோரத்தில் டிஜிட்டல் சர்வே நடத்தி வருகிறது. இதனால் தமிழக எல்லைப்பகுதிகள் பறிபோக்கூடும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கடும் புகார் எழுப்பி வருகிறது. தேனி மாவட்டத்தில் தமிழக எல்லையோரங்களில் உள்ள வன நிலங்களில் கேரள அரசு சர்வே செய்து எல்லைக்கல் நட்டுள்ளது எனவும் இச்சங்கம் புகார் எழுப்பி உள்ளது.
இது குறித்து சட்டசபையில் போடி எம்.எல்.ஏ., ஓ.பி.எஸ்., புகார் எழுப்பியிருந்தார். தமிழக எல்லையோரம் நடைபெறும் டிஜிட்டல் சர்வே மூலம் தமிழக நிலங்கள் பறிபோகிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தமிழக எல்லையோரம் கேரள அரசு டிஜிட்டல் சர்வே நடத்தவில்லை. கேரள பகுதிக்குள் தான் கேரள அரசு டிஜிட்டல் சர்வே நடத்தி வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றி தமிழக எல்லையோரத்தில் டிஜிட்டல் சர்வே நடத்தக்கூடாது என நாங்கள் கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இது தொடர்பாக கேரள எல்லையோரம் உள்ள தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளோம். கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் ஒரு மிகச்சிறிய பகுதியை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கவே மாட்டோம். கேரளா மட்டுமில்லை. கர்நாடக எல்லையிலும் இதேபோல் தமிழகத்திற்கு சொந்தமான ஒரு சிறிய துண்டு நிலத்தை கூட இழக்க மாட்டோம். இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu