சாலையோரத்தில் பழம் விற்கும் பட்டதாரி பெண்

சாலையோரத்தில் பழம் விற்கும் பட்டதாரி பெண்
X

தேனி வாரச்சந்தை எதிரே கடை பழக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் தீபா

சாலையோரத்தில் பழம் விற்கும் மாற்றுத் திறனாளி பட்டதாரி பெண் தீபாவிடம் பழங்கள் வாங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தேனியில் வாரச்சந்தைக்கு எதிரே ரோட்டோரம் எடமால் தெருவினை ஒட்டி உள்ள சிறிய இடத்தில் பழக்கடை நடத்தி வருபவர் தீபா( 27.) காலை 8.30 மணிக்கெல்லாம் கடை திறக்கும் இவர், இரவு 9 மணி வரை அங்கேயே அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார். வெயில், மழை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பழம் விற்கும் தீபா ஒரு பட்டதாரி இளம்பெண். இவரது ஐந்து வயதில் போலியோ தாக்கி இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டன.

இது குறித்து தீபா கூறியதாவது: நான் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவள். 5 வயதில் போலியோவால் கால்கள் செயல் இழந்தன. எனது ஏழைப்பெற்றோர் என்னை பி.காம்., வரை படிக்க வைத்தனர். மாற்றுத்திறனாளி கோட்டாவில் கூட எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிக்கான நிதி உதவி மட்டும் தருகின்றனர். எனது கணவர் ஆனந்த்( 30 ) ஆட்டோ ஓட்டி வருகிறார். என்னை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாற்றுத்திறனாளியான என்னை எப்படி நீங்கள் காதலித்தீர்கள் என நான் அவரிடம் கேட்ட போது, ‛அது முக்கியம் இல்லை. என்னை நம்பினால் திருமணம் செய்து கொள்’ என்று மட்டும் கூறினார். நானும் சரி என்றேன். என்னை நல்ல முறையில் கவனித்து வருகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு பழக்கடை வைத்து வருகிறேன். எனக்கு பழங்கள் சப்ளை செய்யும் பெரிய வியாபாரிகள் விலை குறைவாக தருகின்றனர். விற்காத அழுகிய பழங்களை திரும்ப எடுத்துக் கொள்கின்றனர். எனவே நான் மிகவும் சரியான எடையில் பழங்களை விற்கிறேன். அதிக லாபம் வைப்பதில்லை. ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைத்தால் போதும் என்ற கணக்கில் வியாபாரம் செய்து வருகிறேன்.

சிலர் என்னை பாராட்டுவதோடு, என்னிடம் பழங்கள் வாங்கி ஊக்கப்படுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் எனக்கு ஒரு கடை ஒதுக்கி கொடுத்தால், அங்கு நான் பழங்களை வைத்து வியாபாரம் செய்வேன். இதற்காக தமிழக அரசு வரை மனு கொடுத்தும் இதுவரை பலன் கிடைக்கவில்லை. தோட்டக்கலைத்துறையில் இலவசமாக பழங்கள் விற்கும் வண்டியும், பழங்கள் வாங்க கடனும் தருவதாக கூறியுள்ளனர். எனது குடும்பத்தினரும், பொதுமக்களும் எனக்கு தரும் ஆதரவால் நான் என்றுமே என்னை மாற்றுத்திறனாளியாக நினைத்ததே இல்லை. இவ்வாறு கூறினார்.


Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?