"சாப்பிட்டீங்களா?" அன்புத் தலைவரின் குரல்!
பைல் படம்
சாப்பிட்டீங்களா? இந்த அன்புக் குரல்தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வருபவர்களுக்கு கேட்கும் அடிநாதம்.
இது குறித்து ஜானகி எம்.ஜி.ஆர்., 1988ம் ஆண்டு ஒரு பேட்டியில் கூறியதாவது: என் அத்தானுக்கு நிறைய பேர் கூடிச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக உண்டு. இது அநேகருக்குத் தெரியும். அதற்காக இவரை ஒரு பெரிய சாப்பாட்டுப் பிரியராகச் சொல்லி விடவும் முடியாது. பிற்காலத்தில் காலை உணவையே முற்றிலும் அநேகமாகத் தவிர்த்து வந்தார் என்றுகூடச் சொன்னால் பொருந்தும்.
புதிதாக எடுத்த வெண்ணை! அதில் காய்ச்சிய நுரை அடங்காத முருங்கைக் கீரை இட்டுக் காய்ச்சிய மணக்கும் நெய்! இவை இரண்டையுமே அம்மா எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள் என! அந்தக் கால நினைவுகளில் ஒன்றாக இதை அடிக்கடிச் சொல்வது அவர் வழக்கம்.
இவரது இந்தத் தோட்டத்து விருந்தில் வித்தியாசமோ, பாகுபாடோ என்றும் இருக்கக் கூடாது என்பதுதான் அவர் விருப்பம். இன்று வரையிலும் அதில் எந்த மாறுதலும் இல்லாமல் எந்தத் தரப்பினர் வந்தாலும் ஒரே வகையான உணவு - ஒரே வகையான தின்பண்டங்கள், பானங்கள் தான். அன்றும் இன்றும் இது என் கண்காணிப்பில் மனமுவந்து நடந்து வருகிறது. அவர் இட்ட பணியில் எனக்கு இது ஒரு மனமுவந்த சேவை.
"சாப்பிடடீங்களா?" என்ற அந்த சங்கீத அடிநாத ஸ்ருதி மட்டும் இப்போது எதிரொலிக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்குள் எப்போதும் எழுந்து அடங்கும். ஆனால் அதை அடக்கிக் கொண்டு, இங்கு வருகிறவர்களை இப்போதும் அதே நாத மணி ஓசையோடு நான் வரவேற்கத் தவறுவதில்லை. இருந்தாலும் “சாப்பிட்டீங்களா?” என்று என் தலைவனின் குரல் கேட்ட இடத்தில் வந்தவர்களும் - வரவேற்கிற நானும் இப்போது அந்தச் சின்ன நொடியில் அந்தச் சோக நினைவுகளில் கொஞ்சம் நொறுங்கித் தான் போகிறோம்.
கோடிக் கணக்கான தமிழகக் குழந்தைத் தளிர்களுக்கு தன் கரத்தால் சத்துணவு ஊட்டி - பட்டி தொட்டிதோறும் பட்டினிப் பசியிலிருந்து அவர்களை மீட்ட “என்ன சாப்பிட்டீங்களா?" என்ற அதே கேள்வியோடு நிற்கிற அவரது நினைவு மண்டபங்களான சத்துணவுக் கூடம் என் அன்பு அத்தானுக்கு பெருமை சேர்க்கிறது. அந்த வழியிலேயே அதுவே மனோ திடத்தோடு என்னை இட்டுச் செல்கிறது - பட்டிதோறும் என் பயணம் இப்படித்தான் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி:- தாய் 18.11.1988
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu