காங்கிரசில் தம்மய்யா இணைந்தது பாஜக வுக்கு பின்னடைவு
பைல் படம்
2023ல் மொத்தம் 9 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றாக தான் அண்டை மாநிலமான கர்நாடகா உள்ளது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செல்வாக்குடன் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3 மாதங்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பாவின் வலதுகையாக விளங்கிய தம்மய்யா காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்து கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் தம்மய்யா இணைந்து இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவர் எடியூரப்பாவின் மிக நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது பாரதிய ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்மகளூரு எம்,எல்.ஏ. சிடி.ரவியின் நீண்டகால நண்பரும் ஆவார்.
தற்போது தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு தம்மய்யா சென்றிருப்பதால் அவர் சார்ந்துள்ள லிங்காயத்து சமூக வாக்குகள் பிரிக்கப்படலாம் என்று தெரிகிறது. அத்துடன் லிங்காயத், எஸ்.சி. எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் தம்மய்யா பெற்றிருப்பதால் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கமகளூருவில் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சிடி.ரவி 5-ஆவது முறையாக வெல்வதில் தம்மய்யாவின் வெளியேற்றம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி கவுன்சிலில் முன்னாள் தம்மய்யா போன்றோர் தங்கள் கட்சியில் வரத்தொடங்கி விட்டனர் என்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu