ஐந்து நாளை கடந்தது வீரபாண்டி திருவிழா
வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் குளித்து நேர்த்திக்கடன் செலுத்த தயாராகும் பக்தர்கள்.
தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் விழா. இந்த விழாவிற்கான கம்பம் நடுதல் தொடங்கியதும் ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் விரதத்தில் மூழ்கி விடும். அந்த அளவு பக்திமயமான திருவிழா. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த மே 9ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேரோட்டம் தொடங்கியது. மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை எட்டு நாட்கள் கோயில் நடை சாத்தாமல் 24 மணி நேரமும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்திருக்கும். தினமும் பல லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.
அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், உடலில் சேறு பூசி நேர்த்திக் கடன் செலுத்ததுல், கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை குளிர்வித்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்தல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். விழா திடல் நான்கு கி.மீ., சுற்றளவிற்கு மேல் பரந்து கிடக்கிறது.
பல்வேறு வகையான பொழுது போக்கு நிகழ்ச்சிகள், ராட்டினங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ராட்டினங்களுள் சில ஆபத்தானவை எனவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஒரு ஷிப்டுக்கு 700 காவலர்கள் வீதம் தினமும் இரண்டு ஷிப்டுகளாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், குவியும் பக்தர்களுக்கு தேவையான அளவு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே வீரபாண்டியில் சுகாதாரம் பெரிய அளவில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நான்காம் நாள் திருவிழாவில் தேரோட்டம் தொடங்கியது. இன்று ஐந்தாம் நாள் திருவிழா. இன்னும் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். பாதுகாப்பான முறையில் ஐந்து நாட்கள் விழா நிறைவு பெற்ற நிலையில் மீதம் உள்ள மூன்று நாட்களையும் பாதுகாப்பாக நிறைவு பெற்று தா தாயே என பக்தர்கள் வீரபாண்டி கௌமாரியம்மனிடம் வேண்டுகின்றனர். அந்த அளவு பக்தர்கள் கூட்டம் கோயில் திடலில் அலைமோதுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu