தமிழர்கள் மட்டுமே வசிக்கும் கேரளாவின் தேவிகுளம் தாலுகா
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.
கேரளாவின் தேவிகுளம் தாலுகாவில் தமிழர்கள் மட்டுமே வசிக்கின்றனர் என்பதற்கான புள்ளி விவரங்களை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் 78 தாலுகாக்கள் உள்ளன. இதில் 140 ஆண்டுகள் பழமையானது தேவிகுளம் தாலுகா. 1956ம் ஆண்டு வரை பெரியகுளம் கோட்டாட்சிப் பகுதியில், மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த தேவிகுளம், மொழி வழிப் பிரிவினையின் போது கேரளாவோடு இணைக்கப்பட்டது.
தேவிகுளம் தாலுகாவில் மொத்தமுள்ள 1 லட்சத்து 77 ஆயிரத்து 621 பேரில், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் பச்சைத் தமிழர்கள். இன்றைக்கு நிர்வாக வசதிக்காக 13 கிராம பஞ்சாயத்துகளாக பிரிக்கப்பட்டிருக்கும் தேவிகுளம் தாலுகாவில், அதிகபட்ச ஜனத்தொகை கொண்ட கண்ணன் தேவன் மலை கிராமங்களில் (அதாவது தேயிலை தோட்டங்கள்) மட்டும் 55,738 தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த ஜனத்தொகையில் ஒரு மலையாளியைக் கூட நீங்கள் பார்க்க முடியாது.
மூணாறு நகரத்திலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காந்தலூர் கிராம பஞ்சாயத்தில் 6758 பேர் வாழ்கிறார்கள். இவர்களிலும் ஒரு மலையாளியை கூட நாம் காண முடியாது.
அதனை அடுத்து இருக்கும் கீழாந்தூர் கிராம பஞ்சாயத்தில் 4,205 பேர் வாழ்கிறார்கள். ஒன்றிரண்டு மலையாளிகளை விட்டு விட்டு பார்த்தால், வாழ்வது அத்தனையும் தமிழர்கள்.
கண்ட காந்தலூர் மற்றும் கீழாந்தூர் ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்களிலும், கணிசமான அளவில் முதுவார்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பழைய கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படும் மறையூர் கிராம பஞ்சாயத்தில் 12,399 பேர் வாழ்கிறார்கள். இங்கு ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மலையாளிகள் உள்ளனர். ஆனால் மறையூருக்கு மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் இன்றளவும் வாழ்வது தமிழர்கள் மட்டுமே...
தமிழக எல்லையான கொட்டக்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட டாப் ஸ்டேசனை அடுத்து இருக்கும் வட்டவடை கிராம பஞ்சாயத்தில் 3292 பேர் வாழ்கிறார்கள். பூர்வீகமாக பட்டா நிலங்களைக் கொண்டிருக்கும் இவர்களிலும், ஓரிருவர் மட்டுமே மலையாளிகள். இவர்களும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் வந்து குடியேறியவர்கள்.
வட்ட வடையை அடுத்து இருக்கும் கொட்டக்கம்பூர் கிராம பஞ்சாயத்தில் 2,045 பேர் வாழ்ந்து வருகிறார்கள். பூர்வீக பட்டா நிலத்தை கொண்ட இந்த பஞ்சாயத்தில் தான் கோவிலூர் எனும் தமிழர் கிராமம் வருகிறது. இங்கிருந்து வெறும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கொடைக்கானல் தாலுகாவில் உள்ள கிளாவரை கிராமம்.
தேவிகுளம் நகருக்கு மேற்கேயும், தெற்கேயும் இருக்கும் விரட்டி கிராம பஞ்சாயத்தில் 5,050 பேர் வாழ்கிறார்கள். இவர்களில் பகுதிக்கு மேல் அதாவது 60 விழுக்காடு தமிழர்கள் தான். மன்னன் கண்டம் கிராம பஞ்சாயத்தில் மொத்த ஜனத்தொகை 40 ஆயிரத்து 593. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 38 சதவீதம் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக அறியப்பட்டது.
அதுபோல பள்ளிவாசல் கிராம பஞ்சாயத்தில் 10,775 பேர் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மரபைச் சார்ந்த பூஞ்சார் மன்னரிடம் பிரிட்டிஷ் வியாபாரி சர் தாமஸ் மன்றோ செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இரண்டு பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் இந்தப் பள்ளிவாசல் கிராம பஞ்சாயத்து, குடியேறிய மலையாளிகளுக்கு இணையாக(இன்னொன்று சின்னகானல் கிராம பஞ்சாயத்து) சரிசமமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் ஒரு பஞ்சாயத்து.
மாங்குளம் கிராம பஞ்சாயத்தில் மொத்த ஜனத்தொகை 9,595. இவர்களில் பகுதிக்கு மேல் பச்சை தமிழர்கள். வெள்ளத்தூவல் கிராம பஞ்சாயத்தில் மொத்த ஜனத்தொகை 14, 509. இரண்டாயிரத்திற்குள் மட்டுமே இங்கு இருக்கிறது தமிழர் ஜனத்தொகை.
அதேபோல குஞ்சிதண்ணி கிராம பஞ்சாயத்தில் மொத்த ஜனத்தொகை 12, 202. 1956 மொழிவழி பிரிவினைக்குப் பிறகு பெருமளவில் மலையாள குடியேற்றம் நடந்த, இந்த குஞ்சிதண்ணி பஞ்சாயத்தில் தான், இப்படியாக தேவிகுளம் தாலுகாவில் உள்ள 13 பஞ்சாயத்துகளில் தமிழர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். ஆனாலும் குஞ்சிதண்ணி, வெள்ளத்தூவல், ஆனவிரட்டி ஆகிய மூன்று கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் பெரும்பான்மை யாக வாழ்கிறார்கள் மலையாளிகள்.
மேற்கண்ட மூன்று பஞ்சாயத்துக்களை முற்றாக நாம் நிராகரித்தால் கூட, தேவிகுளம் தாலுகா கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை உள்ளடக்கிய பகுதியாகத்தான் இன்றளவும் இருந்து வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் பெரிய அளவிற்கு மலையாள குடியேற்றம் எதுவும் தேவிகுளம் தாலுகாவில் இல்லாத நிலையில்... தமிழர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தே வந்திருக்கிறது.
மேலே கண்ட புள்ளி விவரங்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஒப்பீடு செய்யப்பட்டது. புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தமிழர்கள் இரண்டு லட்சத்தை தொடுவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் தமிழகத்தோடு இணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu