அழிந்து போன நூற்பாலைகள்.. கலெக்டரிடம் சிவசேனா கட்சியினர் முறையீடு
சிவசேனா கட்சியின் மாநில துணை செயலாளர் குருஅய்யப்பன்.
தேனி மாவட்டத்தில் நலிந்ததால் மூடப்பட்ட நுாற்பாலைகளை அரசே ஏற்று நடத்தி வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
சிவசேனா கட்சியின் மாநில துணை செயலாளர் குரு அய்யப்பன் தேனி கலெக்டர் முரளீதரனிடம் கொடுத்துள்ள மனுவில், தேனி மாவட்டம் என்றாலே இயற்கை நிறைந்த பகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயத்திற்கு எதிரானவர்கள் வருமானம் ஈட்டுவதில் மட்டுமே அக்கறை கொள்கின்றனர். இன்று உள்ள தலைமுறையினருக்கு தெரிந்திடாத விஷயம் ஒன்று இருக்கிறது.
பருத்தி விளைச்சலுக்கு பெயர் போன மாவட்டமாக தேனி மாவட்டம் இருந்தது. மாநிலத்தின் இரண்டாவது பெரிய பருத்தி மார்க்கெட் தேனியில் செயல்பட்டு வந்தது. பருத்தி ஆடைகளுக்கு உள் நாட்டிலும் சரி அண்டை நாடுகளிலும் சரி இன்றளவும் பற்றாக்குறை நிலவி வருகிறது. அந்த அளவு பருத்தி விளைச்சல் உலகளவில் குறைந்து விட்டது.
கோவை, திருப்பூர், ராஜபாளையம் போன்ற பகுதிகளை போலவே நம் மாவட்டமாகிய தேனியிலும் நூற்பாலை தொழில்கள் அதிக அளவில் இயங்கி வந்தது. இதனால் ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பருத்தி ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வியாபாரம் செய்து வந்தனர். பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வறுமையை போக்கி வாழ்வாதாரம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் வங்கிகளில் நூற்பாலை உரிமையாளர்கள் கோடிகளில் கடன் வாங்கி கொண்டு மில் தொழில்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி நூற்பாலைகளை மூடி விட்டனர். இதனால் இத்தொழிலை நம்பி பிழைப்பு நடத்தியவர்கள் இன்று வேலை வாய்ப்பை இழந்து கஷ்ட ஜீவனத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தேனியில் மட்டும் ஏராளமான நுாற்பாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்படிபட்ட சூழலை சரி செய்திடவும் சரிந்து போன நூல் உற்பத்தி தொழில்களை சீர் செய்திடவும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு இங்கு உள்ள அரசியலாளர்களும் சரி ஆட்சியாளர்களும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எனவே இந்த விஷயத்தை சிவசேனா தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பலநுாறு பேர் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்டையில் தேனி மாவட்ட கலெக்டரான தங்கள் கவனத்திற்கு இந்த பிரச்னை கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மீண்டும் தொழில் வளம் பெறவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் இழந்த வேலை வாய்ப்பினை மீண்டும் பெறவும், மூடப்பட்ட நுாற்பாலைகளை அரசே நடத்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் நலிந்த பிற தொழில்களையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu