தேனியில் கண்கலங்கிய துணைத்தலைவர்

தேனியில் கண்கலங்கிய துணைத்தலைவர்
X

தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே  துப்புரவு பணி நடைபெறும் இடத்தில் துணைத்தலைவர் வக்கீல் செல்வம். (மொபைலில் பேசுபவர்)

தேனியில் சாலையோர வியாபாரிகளின் சங்கடங்களை நேரில் கண்ட நகராட்சி துணைத்தலைவர் செல்வம் கண்கலங்கி விட்டார்.

தலைப்பை பார்த்ததும் ஏன் இவ்வளவு ஜால்ரா அடிக்கிறார்கள்? என கோபப்படாதீர்கள். செய்தியை படித்தால் உங்கள் உள்ளமும் கலங்கவே செய்யும். தேனியில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. பஸ்ஸ்டாண்டில் நான்கு மிகப்பெரிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட பேஷின்கள் உள்ளன. 24 மணி நேரமும் பயன்பாட்டில் உள்ள இந்த கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மனிதகழிவுகள் திறந்த வெளி சிமெண்ட் கால்வாய் மூலம் சென்று ஓடையில் கலக்கிறது.

புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் இந்த ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தினை ஒட்டி மிகப்பெரிய ராட்சத தண்ணீர் குழாய் வருகிறது. இந்த குழாயில் இருந்து காற்று வெறியேற தனிக்குழாய் அமைத்துள்ளனர். இதனை யானைக்குழாய் என்ற வழக்கு மொழியில் அழைப்பார்கள். இந்த குழாயில் இருந்து காற்று வெளியேறும் போது, சிறிதளவு தண்ணீரும் வெளியேறிக் கொண்டே இருக்கும். 24 மணி நேரமும் இந்த குழாயில் தண்ணீர் வெளியேறும். இப்படி வெளியேறும் தண்ணீர் விழும் இடத்தில் கழிப்பறையில் இருந்து வெளியேறிய மனிதக்கழிவுகள்... கவனியுங்கள் மனிதக்கழிவுகள் தேங்கி கிடக்கும். இதுவரை இந்த பாதையில் 12 ஆண்டுகளாக சென்று வருபவர்கள் கவனிக்காத ஒரு விஷயத்தை தேனி நகராட்சி துணைத்தலைவர் செல்வம் (இவர் பிரபல வக்கீலும் கூட) கவனித்துள்ளார்.

அவர் காலையில் இந்த வழியாக தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு உடற்பயிற்சிக்காக சென்றுள்ளார். செல்லும் போது இந்த தேங்கி கிடக்கும் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் ஒரு கல்லில் அமர்ந்து நடுத்தர வயதுள்ள ஒருவர் குளிப்பதை பார்த்துள்ளார். அவர் குளிக்கும் நீர், சுற்றிலும் உள்ள மனித கழிவுகளில் தெறித்து மீண்டும் அவர் மீதே தெறித்துள்ளது.

இதனை கவனித்த செல்வம், அங்கு நின்று, 'குளிக்கும் நபரிடம், இங்கு என்ன செய்கிறீர்கள்? நீங்கள் யார்? என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், 'கேட்பது நகராட்சி துணைத்தலைவர் என்பதை அறியாமல், 'நான் ஒரு அனாதை. எனக்கு குடும்பம், வீடு என எதுவும் கிடையாது. புதிய பஸ்ஸ்டாண்டில் எடுப்பு கடை வைத்துள்ளேன். கடையில் சாப்பிடுவேன். பஸ்ஸ்டாண்டில் படுத்து துாங்குவேன். குளிக்க இடம் இல்லை. தினமும் இங்கு வந்து குளிப்பேன். எனது துணிகளையும் இங்கு துவைத்து காயப்போட்டு, எடுத்து மடித்து ஒரு பையில் வைத்து, எனது கடை அருகில் வைத்துக் கொள்வேன். நான் குடிக்க இந்த குழாயில் இருந்தே குடிநீரை பிளாஸ்டிக் குடத்தில் பிடித்து வைத்துக் கொள்வேன். பஸ்ஸ்டாண்ட் திறந்தது முதல் இது தான் என் வாழ்க்கை. நான் மட்டுமல்ல... என்னைப்போல் மேலும் சிலர் இப்படித்தான் வாழ்கின்றனர். தவிர பஸ்ஸ்டாண்டில் கடை வைத்துள்ள பலர் இங்கு தான் குடிநீர் பிடித்து குடிக்கின்றனர்' எனக்கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் செல்வம் ஆடிப்போய் விட்டார். இப்படி மனித கழிவுகள் தேங்கி கிடக்கும் ஒரு சாக்கடையில் விழும் நீரை பிடித்துக்குடிக்கிறீர்களா? இதில் குளித்து பல ஆண்டுகளாக வாழ்க்கை நடத்துகிறீர்களா? இது எப்படி சாத்தியம்... அதுவும் உங்களை பார்த்தால் உடலுக்கு முடியாதவர் மாதிரி தெரிகிறதே... இதன் மூலம் உங்கள் நோய் அதிகரிக்குமே தவிர குறைய வழியில்லையே' என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் ஆமாம் சார் நான் கடுமையான உடல் உபாதைகளில் சிக்கி தவிக்கிறேன். வேறு வழியில்லை எனக்கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவரது அழுகையை பார்த்த துணைத்தலைவர் செல்வம் என்ன செய்வது என தெரியாமல் நிலைகுலைந்து கண்கலங்கி விட்டார். உடனடியாக அங்கிருந்து தேனி நகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் பெரும் துப்புரவு பணியாளர் படை வந்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி, கழிவுகள் தேங்காமல் கடந்து செல்ல (தற்காலிகமாக வேறு வழியில்லை) வழி ஏற்படுத்தினார். இவர்கள் குளிக்கும் இடத்தில் அதாவது யானைக்குழாயில் இருந்து குடிநீர் விழும் இடத்தை முழு அளவில் சுத்தப்படுத்தி, அங்கு குளிக்கவும், குடிநீர் பிடிக்கவும் முடிந்த அளவு சுத்தமாக (தற்காலிகமாக) ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். தற்போது தேனி நகராட்சி நிர்வாகம் இந்த கழிவுகளை முழுமையாக குழாய் வழியாக நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த துப்புரவு பணி செய்து முடித்த பின்னர், புதிய பஸ்ஸ்டாண்ட் வியாபாரிகள் பலர் துணைத்தலைவர் செல்வத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!