புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம் :ஆசிரியர் கூட்டணி முடிவு

புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம் :ஆசிரியர் கூட்டணி முடிவு
X

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் திருச்சியில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பழைய ஓய்வூதியத்தை வலியுறுத்தி ஜூலை 30 -ல் புதுடெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மு.லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.

கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளரும், உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 30ஆம் தேதி புதுடெல்லியில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ரத யாத்திரை தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அக்டோபர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.மொரிசியஸ் நாட்டில் நடைபெற உள்ள உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் தமிழகத்திலிருந்து 100 ஆசிரியர்கள் பங்கேற்பது.வட்டாரக் கிளைகள் தேர்தல், மாவட்டக் கிளை தேர்தல்களை முடித்து மாநில தேர்தலையும் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் மாநிலப் பொருளாளர் இரா.குமார் நன்றி கூறினார். முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!