திருமண சீசன் தொடங்க உள்ளதால் சமையல் கலைஞர்களுக்கு கிராக்கி..!

திருமண சீசன் தொடங்க உள்ளதால் சமையல் கலைஞர்களுக்கு கிராக்கி..!
X

சமையல் மாஸ்டர் (கோப்பு படம்)

தென் மாநிலங்களை சேர்ந்த சமையல் கலைஞர்கள் சென்னையில் நடைபெறும் திருமண மற்றும் கோயி்ல் விழாக்களுக்கு சமையல் ஆர்டர் பெற்று வருகின்றனர்.

தை மாதம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களுக்கு திருமண மற்றும் குடும்ப விசேஷங்கள், கோயில் திருவிழா சீசன்கள் தொடங்க உள்ளதால், சமையல் கலைஞர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் நெல்லை சமையலுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால், தென்னிந்திய சமையல் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செட்டிநாட்டு சமையல், நெல்லை சமையல் (தென்மாவட்ட சமையல்) பிரசித்த பெற்றவை. இதில் செட்டிநாட்டு சமையல் கொஞ்சம் காஸ்ட்லியானது மட்டுமின்றி, அதிக நுணுக்கங்களை கொண்டது. நெல்லை சமையல் குறைந்த செலவில் தரமான நாட்டுச்சுவை கொண்டது. இதனால் திருமண வீடுகள், விசேஷ வீடுகளில் முதல் தேர்வு நெல்லை சமையல் தான்.

அதுவும் சென்னையில் வசிப்பவர்களில் அதிகம் பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்ப நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகளில் நெல்லை சமையலையே தேர்வு செய்கின்றனர். இதனால் சென்னையில் உள்ள சமையல் ஒப்பந்ததாரர்கள் தென் மாவட்டங்களில் உள்ள சமையல் கலைஞர்களை மாதக்கணக்கில் சம்பளத்திற்கு பேசி, சென்னையில் தங்க இடம் வழங்கி வேலை கொடுப்பார்கள்.

கடும் மழைக்கு பின்னர் சென்னையில் தற்போது இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. தை மாதம் முதல் சென்னையில் திருமண சீசன் தொடங்க உள்ளதால் (மார்கழி மாதமும் இப்போது திருமணம் நடக்கிறது), சமையல் ஒப்பந்ததாரர்கள் இப்போதே, தென் மாவட்டங்களில் இருந்து சமையல் கலைஞர்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல முன்பதிவு செய்ய உள்ளனர்.

நெல்லை சமையலுக்கு உரிய சமையல், மசாலா பொருட்கள் சென்னையில் கிடைக்காது. அந்த பொருட்களை மதுரை, விருதுநகர், தேனி மார்க்கெட்டுகளில் இருந்து சென்னைக்கு வாங்கிச் செல்கின்றனர். இதனால் சமையல் கலைஞர்கள் வாழ்வில் நல்ல சம்பளம் வாங்கும் நேரம் தொடங்கி விட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!