தேனி ஹாக்கி கிரவுண்டில் தீபாவளி கொண்டாட்டம்..!

தேனி ஹாக்கி கிரவுண்டில்  தீபாவளி கொண்டாட்டம்..!
X
தேனி ஹாக்கி கிரவுண்டில் இன்று காலை பயிற்சி பெற்ற வீரர்கள்.
தேனி ஹாக்கி கிரவுண்டில் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.

தேனி நகராட்சியின் துணைத்தலைவர் எம்.செல்வம். இவர் வக்கீலாகவும் பணிபுரிந்து வருகிறார். தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர், மிகச்சிறந்த சமூக சேவகர், சமூக ஆர்வலர். வின்சன் ஹாக்கி கிளப், யு.எஸ்.ஏ., தடகள கிளப் நடத்தி வருகிறார். இதில் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மாஸ்டர் பிளான் காம்ப்ளக்சில் உள்ள விளையாட்டு அரங்கில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஹாக்கி வீரர்களுக்கு இலவச பயிற்சிகளை செல்வம் வழங்கி வருகிறார். தடகளத்திற்கு தனியாக பயிற்சியாளர்கள் உள்ளனர்.

தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். இவர்களது பயிற்சி செலவு, பயிற்சி உபகரணங்கள் செலவு, இவர்கள் போட்டிக்கு தயாராகி, சென்று வரும் செலவு உட்பட அத்தனை செலவுகளையும் செல்வமே ஏற்றுக் கொள்கிறார். (இதற்கு மட்டும் குறைந்த பட்சம் ஆண்டு தோறும் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது).


இங்கு பயிற்சி பெற்ற பலர் ராணுவம், போலீஸ் துறை, தீயணைப்புத்துறைகளில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுதோறும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இங்கிருந்து போலீஸ், பாதுகாப்புத்துறைகளின் பணிகளுக்கு செல்கின்றனர். அந்த அளவுக்கு இவர்களது உடல் திறன், கல்வித்திறனை மேம்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

பலர் விளையாட்டு திறன் மூலம் மிகவும் தலைசிறந்த கல்லுாரிகளில் முழுமையான இலவச கல்வி சலுகை திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளனர். பலர் மதுரை, அரியலுார், திருச்சி, ராமனாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இவர்களது சமூக பணியின் வெற்றிக்கு இதுவே மிக, மிக சிறந்த ஆதாரம். இந்த ஹாக்கி கிளப், தடகள கிளப்களில் சேர்ந்து விளையாட்டு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உடல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மட்டுமின்றி, மனோபல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தன்னைத்தானே ஆளுமை செய்யும், சுய திறன் ஆளுமை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இவர்கள் சமூக ஒழுக்கங்களில் மிகவும் சிறந்து விளங்குவதோடு, மற்ற மாணவ, மாணவிகளுக்கும் வழிகாட்டியாக திகழ்கின்றனர். இது மிகப்பெரிய பாராட்டக்குரிய விஷயம்.

இதுவரை ஹாக்கி, தடகள பயிற்சிகள் இரண்டுமே மாவட்ட விளையாட்டு அரங்கில் தான் நடந்து வந்தது. இந்த கிளப்பின் சேவையினை அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தனது கலெக்டர் நிதியில் இருந்து சிறப்பான ஹாக்கி கிரவுண்ட் அமைத்து கொடுத்துள்ளார்.

தேனிமாவட்ட விளையாட்டு அலுவலர் முருகனுக்கும் ஹாக்கி கிரவுண்ட் அமைத்து கொடுத்ததில் பெரும் பங்கு உண்டு. தவிர கிளப்களின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் வக்கீல் செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோரின் பரிந்துரையினை ஏற்று அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகள், உடைமாற்றும் வசதிகள், சுற்றுச்சுவர் வசதிகள் உட்பட பல வசதிகளை செய்து தருவதாகவும் கலெக்டர் ஹஜீவனா உறுதியளித்துள்ளார்.

இன்று காலை இந்த ஹாக்கி கிரவுண்டில் தீபாவளி கொண்டாட்டம் வக்கீல் செல்வம் தலைமையில் நடந்தது. பயிற்றுநர்களும், பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். அத்தனை பேருக்கும் வக்கீல் செல்வம் தீபாவளி பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசு வெடிப்பது குறித்து வழிமுறைகளை வழங்கினார்.

வின்சன் ஹாக்கி கிளப்பிற்கும், யு.எஸ்.ஏ.,தடகள கிளப்பிற்குள் பல்வேறு அரசு உதவிகள் கிடைத்தால், இங்கிருந்து மிகச்சிறந்த திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கி, போலீஸ், ராணுவத்துறைகளுக்கு வழங்க முடியும். எனவே மாவட்ட கலெக்டர் ஹஜீவனா இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!