தந்தையை போல் மகள் :வியக்க வைக்கும் இளம்பெண்..!

தந்தையை போல் மகள் :வியக்க வைக்கும் இளம்பெண்..!
X

கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தனது தந்தை நினைவாக டி - சார்ட் வழங்கிய லோகநாயகி தனது கணவர் கிரிதரனுடன்.

தனது தந்தை செய்து வந்த பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அவரது மகள் தனது பெருங்கனவினை கை விட்டு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

தேனி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் பாண்டியராஜன். மிகவும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தொழில், விவசாயம் என எப்போதும் பிஸியான வேலை இருக்கும். ஆனால் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவுவது, வறியவர்களுக்கு உதவுவது என 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நலப்பணிகளை செய்து வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் இவர் நலப்பணிகள் செய்து வந்தாலும், இது பற்றி இவர் ஒருமுறை கூட யாரிடமும் சொல்லிக்கொண்டதுமில்லை. இவரது நலப்பணிகள் பற்றி வெளிப்படுத்தியதும் இல்லை. இவ்வளவுக்கும் அ.தி.மு.க.,வில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார்.

இவரது மகள் லோகநாயகி. இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது இவரது தந்தை பாண்டியராஜன், ‘மக்கள் பணி தான் முக்கியம். ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவுகள் எப்படி வந்தாலும், மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்’ என்ற உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோகநாயகியின் தந்தை பாண்டியராஜன் திடீரென இயற்கை எய்தினார். யாரும் எதிர்பாராத நிலையில் தந்தையை இழந்த லோகநாயகி, குடும்ப பொறுப்புகளை மட்டும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. தனது தந்தை செய்து வந்த நலப்பணிகளையும் கையில் எடுத்துக் கொண்டார்.

இந்த ஆண்டும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார். இதுவும் வெளியே தெரியவி்ல்லை. இவரது பணிகளுக்கு கணவர் கிரிதரனும் முழுமையாக பச்சைக்கொடி காட்டியதோடு, தானும் தன் மனைவி வழங்கும் நலத்திட்டங்களில் பங்கேற்று வருவதும் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம்.

இந்நிலையில், இவரது மக்கள்பணிகளை கண்ட அ.தி.மு.க., இவருக்கு தேனி கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியை வழங்கி உள்ளது. இந்நிலையில் கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்தநாள் மாரத்தான், மற்றும் அதிவிரைவு சைக்கிள் போட்டிகள் நடந்தன.

இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு டி-சர்ட் அடித்து இலவசமாக வழங்கினார். மிகப்பெரிய செலவில் வழங்கப்பட்டாலும் இந்த டி.சர்டில் பென்னிகுக் பெயர் தவிர வேறு எந்த பெயரும் அச்சிப்படவில்லை. அதிவிரைவு சைக்கிள் போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார்.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் மன்றம் நடத்தி வரும் நலத்திட்டங்களில் பாண்டியராஜனின் பங்களிப்பும் இருக்கும். எனவே தான் லோகநாயகி தனது தந்தை மறைந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், இவர் தனது தந்தையின் நினைவாகவே இந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்தார்.

வழக்கமாக தந்தை விட்டுச் சென்ற பணிகளை தொடர சிலருக்கு மட்டுமே வாய்ப்புகளும், சூழலும் ஒத்துழைக்கும். இந்த நிலையில் தந்தை செய்த நலத்திட்டங்களை தடைபடாமல் தொடர்ந்து செய்யும் லோகநாயகியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!