உத்தமபாளையம் பகுதியில் மோட்டார் போட்டு திருடப்படும் தண்ணீர்

உத்தமபாளையம் பகுதியில் மோட்டார் போட்டு திருடப்படும் தண்ணீர்
X

தாமரைக்குளம் கண்மாய் 

தாமரைக் குளம் கண்மாயை சுற்றிலும் அதிகமான அளவில் ராட்சத பம்ப் மோட்டார் அமைத்து. பைப்லைன் பதித்து மெகா குழாய் மூலம் தண்ணீரை திருடுவது அதிகரித்து வருகிறது

கோகிலாபுரம் ராமசாமி நாயக்கன்பட்டி தாமரைக்குளம் கண்மாய் உத்தமபாளையம் தாலுகாவில் மிகவும் பெரியது. 240 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முல்லைபெரியாறு அணையில் இருந்து பெரும்பாலும் கண்மாய்களில் தேக்கப்பட்ட பின்பே நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், கால்வாய்களின வழியே செல்கிறது. இதில் தாமரைகுளம் கண்மாயை பொருத்தவரை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழை, காலங்களில் அதிகமான அளவில் தண்ணீர் வரத்து ஏற்படுகிறது.

தாமரைக் குளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இதனை சுற்றியுள்ள கோகிலாபுரம், ராமசாமி நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், கிராம கிணறுகள் வளம் பெற்றுள்ளன.

இக்கண்மாயில் ஆகாயத்தாமரைகள் அதிகம் வளர்ந்துள்ளன. கண்மாய் பரப்பில் 50 சதவீதம் முள்செடிகள் வளர்ந்து கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளும் அதிகமாகி வருகிறது. தாமரைக்குளம் கண்மாய் கால்நடைகளுக்கு நீர் அருந்தும் நீராதாரமாக பார்க்கப்படுகிறது. இந்த கண்மாயை சுற்றிலும் உள்ள கிராமங்களில் மாடு வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடைகளை குளிப்பாட்டுதல், கால்நடை களுக்கு தாகம் தீர்த்தல் போன்ற பணிகளுக்கு இந்த கண்மாய் பெருமளவில் பயன் உள்ளதா உள்ளது. கால்நடைகள் வரும் பாதைகள் முள்புதர்களாக உள்ளன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் தாமரைக் குளம் கண்மாய் தூர்வார 2.50 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். நிதியும் ஒதுக்கப்பட்டது. பணிகள் நடந்தது போல் போட்டோ மட்டும் எடுத்து விட்டு, பணிகளே செய்யாமல் பணத்தை சுருட்டி விட்டனர். இப்படி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்மாயினை சீரமைக்க மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்தமபாளையம் தாமரைக் குளம் கண்மாயை சுற்றிலும் அதிகமான அளவில் ராட்சத பம்ப் மோட்டார் அமைத்து விளைநிலங்களின் வழியே பூமிக்குள் பைப்லைன் பதித்து மெகா குழாய் மூலம் தண்ணீரை திருடுவதும் அதிகரித்து வருகிறது. இப்படி திருடி தண்ணீரை விற்று மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு அரசியல் பின்புலம் மிகவும் அதிகமாக உள்ளது. தண்ணீரை விற்பதன் மூலம் மழை இல்லாத காலங்களில் தட்டுப்பாடு உண்டாகிறது. அதிக திறன் கொண்ட மோட்டார் போடுவது மட்டும் அல்லாமல் கிணறுகள் தோண்டி தண்ணீரை பல கிலோமீட்டர்க்கு கொண்டு செல்வதும் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தருகிறது.

இது குறித்து ராமசாமிநாயக்கன்பட்டி மக்கள் கூறுகையில், ராமசாமிநாயக்கன்பட்டி தாமரைகுளம் கண்மாய் சுமார் 240 ஹெக்டேர் பரப்பு உடையது. ஆனால் இன்றோ ஆக்கிரமிப்பின் காரணமாக, சுமார் 100 ஹெக்டேர் வரையே உள்ளது. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும்.

மேலும் கண்மாய் தூர்வாரினால் நிலத்தடி நீர்மட்டம் பன்மடங்கு பெருகும். விவசாய பரப்பு அதிகரிக்கும். தண்ணீர் திருடப்பட்டு விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும்.

இது தவிர கண்மாய் தூர்வாரி படகுசவாரி விடலாம். பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமாக இதனை மாற்ற நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil