142 அடி நீர் தேக்கினால்தான் எங்களுக்கு தீபாவளி : 5 மாவட்ட விவசாயிகள் சபதம்
நீர் நிரம்பி காணப்படும் முல்லை பெரியாறு அணை.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் வரை பட்டாசு வெடிக்க மாட்டோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சபதம் செய்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு கேரளா வழியாக தண்ணீர் திறந்து விட்டுள்ளது. தற்போது விநாடிக்கு 3500 கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் எட்டு ஷட்டர்கள் வழியாக கேரளாவிற்கு வெளியேறி வருகிறது.
தமிழகம் காய்ந்து கிடக்கும் நிலையில், முல்லை பெரியாறு நீர் வீணாக கடலுக்கு செல்வது தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகளை வேதனையின் விளிம்பில் வைத்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை கட்டி 126 வருடம் ஆகிறது. முல்லை பெரியாறு தண்ணீர் மூலம் ஒருமுறை கூட கேரளாவில் இதுவரை சிறு சேதம் கூட ஏற்படவில்லை.
அதேபோல் நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வகையில் அணை மிக பலமாக கட்டப்பட்டுள்ளதை மத்திய, மாநில பொறியியல் துறை அதிகாரிகள் பலமுறை உறுதி செய்துள்ளனர். அணையின் கட்டுமான நுட்பத்தை கண்டு இந்திய பொறியியல்துறையே ஆச்சரியத்தின் உச்சியில் உள்ளது. இன்றளவும் அணை மிக, மிக வலுவுடன் உள்ள நிலையில் கேரளாவின் துரோகம் தமிழக விவசாயிகளை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த 42 ஆண்டுகளாக துரோகம் மட்டும் செய்து வந்த கேரளா தற்போது தண்ணீரை திறந்து விட்டு அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி விட்டது. இதனால் தமிழக கேரள மக்களிடையே பெரும் மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நாங்கள் தீபாவளி கொண்டாட தயாராக இல்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னை முடிவுக்கு வந்து அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடி தேக்கினால் மட்டுமே நாங்கள் தீபாவளி கொண்டாடி பட்டாசு வெடிப்போம். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu