முல்லை பெரியாறு நீரைத்தடுத்தால் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும்
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் நுாற்றி முப்பத்தாறு அடியை கடந்துள்ள நிலையில், அணையில் கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபுட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டம் 136 அடியை தாண்டி உள்ளது. இனி தண்ணீர் தேக்க ஷட்டர்களை மூட வேண்டும். ஷட்டர்கள் தற்போது மூடப்பட்ட நிலையில் தான் உள்ளன. ஆனாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடுதலாக தேக்க விடாமல் தடுக்க கேரள அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்தும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முல்லை பெரியாறு அணையினை கூர்ந்து கவனித்து வருகின்றனர். அங்கு கேரள அரசு தண்ணீரை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதேநேரம் கேரள அரசு எல்லை மீறி செயல்பட்டால் பதிலடி கொடுக்கவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் 2011ம் ஆண்டு கேரள அரசு முல்லை பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்த போது, அதற்கு பதிலடி கொடுத்த தேனி மாவட்ட விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம்- கேரளா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒரு கிலோ காய்கறி கூட செல்லவில்லை. கேரளா செல்லும், காய்கறி, இறைச்சி, பருப்பு, உணவு, அரிசி, என எல்லாவற்றையும் தடுத்தனர். தேனி மாவட்டத்தில் இருந்த கேரள மக்கள் விவசாயிகளால் தொந்தரவு வரும் என பயந்து கேரளாவிற்கு திரும்பினர். ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தை கண்டு கேரள அரசே மிரண்டு போனது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, போன்ற மிக வலுவான தலைவர்கள் ஆட்சியில் இருந்தும் போராட்டத்தை தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை. கல்வீச்சு, துப்பாக்கி சூடு நடைபெற்றும், ஒரு கட்டத்தில் முல்லை பெரியாறு அணைக்கு செல்வோம் என விவசாயிகள் புறப்பட்டு விட்டனர். மிகவும் படாதபாடு பட்டு, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்தது தமிழக அரசு.
அப்போது, முதல் தற்போது வரை கேரள அரசு முல்லை பெரியாறு அணை விஷயத்தில் சற்று அடக்கி வாசித்தே வருகிறது. இந்நிலையில் இப்போது மீண்டும் கேரளா சீண்டலில் இறங்கியுள்ளதால், தமிழக விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணையினை குண்டு வைத்து தகர்ப்போம், அணையில் நீரை தேக்க விடமாட்டோம். தண்ணீரை தமிழகத்திற்கு தர மாட்டோம் என கேரளாவில் சிலர் பகிரங்கமாக பேசியும், மிரட்டியும் வருவது தமிழக விவசாயிகளை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது. கேரள அரசும் மறைமுகமாக பல்வேறு சீண்டல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே முன்பு போல் கேரளாவிற்கு எதிராக போராட்டம் வெடித்து விடுமோ என தமிழக அரசும் கலங்கிப்போய் உள்ளது.
தமிழக விவசாயிகளின் மனநிலை, வியூகங்கள், செயல்பாடுகளை அறிய தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் கேரள உளவுப்பிரிவு போலீசார் வந்து தங்கி தகவல்களை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்கும் விஷயத்தில் கேரள அரசு முரண்டு பிடித்தால், தமிழக விவசாயிகள் கடும் பதிலடி நடவடிக்கைளில் ஈடுபடக்கூடும் என உளவுப்போலீசார் கொடுத்துள்ள தகவல்கள் தமிழக - கேரள அரசுகளை கலக்கத்தில் தள்ளியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu