சுருளிஅருவியில் பக்தர்களிடம் வசூல்: இந்து எழுச்சி முன்னணி கண்டனம்
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.
இந்து எழுச்சி முன்னணியின் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ்ஜீ தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவர் பொன்ரவிஜீ, மாவட்ட அமைப்பாளர் கே.கோவிந்தராஜ்ஜீ, மாவட்ட பொதுச் செயலாளர் கம்பம் மாயலோகநாதன்ஜீ, மாவட்ட பொருளாளர் கே.செந்தில்குமார்ஜீ, மாவட்ட செயலாளர்கள் ஆர்.பி.ராமமூர்த்திஜீ, ஜி.சோலைராஜன்ஜீ, தேனி நகர தலைவர் எம்.ஆர்., செல்வபாண்டியன்ஜீ, நகர பொருளாளர் எஸ்.ராஜேஷ்குமார்ஜீ, நகர அமைப்பாளர் அரண்மனை ஜி.முத்துராஜ்ஜீ மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பாரத தேசத்தின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு இந்து எழுச்சி முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் தெருக்கள், மூலை முடுக்குகள் எல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழக மக்களின் குறிப்பாக தினக்கூலிகள் மற்றும் நடுத்தர மக்களின் உழைப்பை மறைமுகமாக உறிஞ்சி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை வழி நடத்துவது என்பது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். அரசே நடத்தும் இந்த டாஸ்மாக் கடைகளால் தினமும் பல நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களின் மாங்கல்யத்தையும், பூவையும், பொட்டையும் இழந்து வருகிறார்கள். அரசாங்கம் மதுபான கடைகளின் மூலம் வருமானம் ஈட்டி அதன் மூலம் அரசை நடத்துவது அவலத்திற்குரியது. எனவே, அரசானது உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வந்து மக்களை காக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது கற்பழிப்பு மோசடி ரௌடிகளின் அராஜகங்கள் போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறையும் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தப் போக்கினை தவிர்த்து தமிழக அரசும் காவல்துறையும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேனி மதுரை ரோட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொண்டு முடித்து பொதுமக்களின் அசௌகரியத்தை தவிர்க்குமாறும் மற்றும் தேனி பெரியகுளம் சாலையில் ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்கி விரைவாக முடித்து தேனி நகர மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்குமாறும் சம்பந்தப்பட்ட துறைகளை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குப்பை கூளங்கள் நிரம்பியும் கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவு நீர் செல்லாமல் கொசுக்கள் நிறைந்தும் காணப்படுவதாலும் இனிவரும் காலங்கள் மழைப்பொழிவு காலம் என்பதாலும் தேனி நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையின் மூலம் சுகாதாரத்தை பேணுவதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி கேட்டுக் கொள்கிறது.
தேனி அல்லிநகரத்தில் ஸ்தாபித்திருக்கும் மலைக்கோவிலான வீரப்ப அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்து முடித்த பின்பும் இன்னும் சிலருடைய நிர்பந்தத்தின் காரணமாக அளந்த அளவீட்டின் படியான அளவு பிரகாரம் சுற்றுச்சுவர் எழுப்பாமல் காலதாமதம் செய்வது பக்தர்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டு ஸ்ரீ வீரப்பயனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சின்னமனூரில் அமைந்திருக்கும் சிவகாமி உடனுறை பூலாநந்தீஸ்வரர் ஆலயம் ஆனது ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்த வேண்டிய காலத்தையும் தாண்டி இன்னும் குடமுழுக்கு விழா நடத்தப்படாமல் இந்து சமய அறநிலைத்துறையும் தமிழக அரசும் காலதாமதம் செய்து வருகிறது. விரைவாக சிவகாமி உடன் உறை பூலாநந்தீஸ்வரர் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியும் அது அமையப்பெற்ற தலமும் மிகவும் புனிதமானது. இந்த தலத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் ஆடி அமாவாசை தை அமாவாசை வருடப்பிறப்பு தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திதி போன்ற காரியங்கள் செய்வதற்காக தினமும் பல நூறு பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்த தலமானது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும் வாசம் செய்த ஸ்தலமாகும். இன்றைக்கு இந்த புனித தலத்தை சுற்றுலா தலம் போன்று மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும் குறிப்பாக வனத்துறையும் முயற்சி செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புனித நீராடுவதற்கு அனுமதிக்கும் இந்த செயலானது இந்த புனித தலத்தின் புனிதத்தையும் மாண்பையும் கெடுக்கும் விதமாக இருகிறது. வருமானம் ஈட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறைக்கும் வேறு பல வழிகள் இருக்கும் நிலையில் பக்தர்களிடம் பணம் பெறும் இந்த அறமற்ற செயலை உடனே நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தையும் வனத்துறையையும் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடியை பாரத்தின் பிரதமர் ஆக்கவும் பத்தாண்டு கால ஆட்சியில் பாரதம் அடைந்த முன்னேற்றத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சென்று மிகப்பெரிய விழிப்புணர்வு மற்றும் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இந்துக்களின் இஷ்ட தெய்வமும் நமது பாரத தேசத்தின் அவதார புருஷரும் ஆகிய ராமபிரான் அவதரித்த அயோத்தி மாநகரில் மிகப் பிரமாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இந்துக்களின் புனித தலமான ஸ்ரீ ராமர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக வைபவ பெரும் திருவிழா வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த மாபெரும் வைபவத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதெனவும் புனித கைங்கரியத்தில் தங்களை ஆட்படுத்திக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu