கூடலுார் போறீங்களா....கொஞ்சம் பிளான் பண்ணுங்க....
பைல் படம்.
இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் இப்படி ஒரு லீட் கொடுத்து செய்தி எழுத வேண்டிய அபந்தம் இருக்கத்தான் செய்கிறது. கூடலுார் ஒன்றும் கிராம ஊராட்சி இல்லை. ஒதுக்குப்புறமான மலைப்பகுதியிலும் இல்லை. திண்டுக்கல்- குமுளி- நெடுங்கண்டம்- கொச்சி என்று செல்லும் தேசிய நெடுஞ்சாலை (தற்போது நான்கு வழிச்சாலையும் செல்கிறது) கூடலுார் நகராட்சியை ஊடுறுவி செல்கிறது.
ஆனாலும் கம்பம்- கூடலுார் இடையே இரவில் பயணிக்க போதிய வசதிகள் இல்லை. போதிய அளவு இல்லை என்பதை விட வசதிகளே இல்லை என்று தான் சொல்ல முடியும். இரவு 10 மணி வரை அடுத்தடுத்து பஸ்கள் உண்டு. இரவு 10 மணி பஸ்ஸை விட்டு விட்டால், அடுத்த பஸ்க்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோ காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் இரவில் பஸ் வராது. ஏதாவது ஒரிரு பஸ்கள் நீண்ட துாரத்தில் இருந்து வந்தாலும், பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பயணிகளை பற்றி கவலைப்படாமல் நேரடியாக குமுளிக்கு மலையேறி விடும். கூடலுார் செல்ல கம்பம் பஸ்ஸ்டாண்டில் இரவில் காத்திருப்பவர்களை இறைவன் தான் கரேயேற்ற வேண்டும்.
குடிமகன்கள் தொல்லை, கொசுக்கடி, இரவு நேர சிக்கல்கள் அத்தனையும் எதிர்கொண்டு தான் அவர்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் முன்பே கூறியது போல் சில மணி நேரமோ, பல மணி நேரமோ, இரவெல்லாமோ ஆக இரவு 10 மணிக்கும் கம்பத்தில் இருந்து கூடலுார் செல்லாவிட்டால், அடுத்து காலை 5 மணி பஸ்சுக்கு மட்டுமே உத்தரவாதம் உண்டு. இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்தாலும், விடியல் பிறக்கவே இல்லை. பாவம் ஆர்.டி.கோபால் (முன்னாள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்) எவ்வளவோ போராடிப் பார்த்தார் முடியவில்லை. அவரும் இறைவனடி சேர்ந்து விட்டார். இப்போது இது பற்றி பேசக்கூட ஆள் இல்லை.
கம்பம் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் தி.மு.க.,வின் மாவட் செயலாளர் ராமகிருஷ்ணனிடமும், ஆண்டிபட்டி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருக்கும் மகாராஜனிடமும் (கூடலுார் ஆண்டிபட்டி தொகுதியில் வருகிறது) பலமுறை மக்கள் முறையிட்டும் முடியவில்லை. இப்போதைக்கு முடிவதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை. எனவே மக்கள் கூடலுாருக்கு பயணம் செய்யும் போது, சிக்கலில் மாட்டாமல் இருக்க தங்கள் பயண திட்டத்தை தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu