கேரளத்தவர்களை கட்டுக்குள் கொண்டு வர நாங்களே நெருக்கடி கொடுப்போம்...

கேரளத்தவர்களை கட்டுக்குள் கொண்டு வர நாங்களே நெருக்கடி கொடுப்போம்...
X
கேரளத்தவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கொடுக்கப்போகும் நெருக்கடிகள் குறித்து விரைவில் அறிவிப்போம்

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தொடர்ந்து சர்வாதிகாரப்போக்கினை கடைபிடிக்கும் மலையாளிகளை கட்டுக்குள் கொண்டு வர நாங்களே நெருக்கடி கொடுப்போம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராசசேகர் (எஸ்.ஆர்.தேவர்), முதன்மை செயலாளர் இ.சலேத்து, செயலாளர் பொன்காட்சிகண்ணன், பொருளாளர் லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரளாவில் முல்லை பெரியாறு அணை குறித்த விஷமப்பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன. புரோக்கர்களும், அரசியல்வாதிகளும் முல்லை பெரியாறு களத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய அவல நிலை உருவாகி உள்ளது. அது கண்டிப்பாக தமிழக அரசுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும்.

கேரள நடிகர்கள் பெரியாறு அணைக்காக உயிரை விடப்போவதாக வசனம் பேசுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. இந்த நாடக கம்பெனிகளின் நாடகங்களை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே அரசு விரைந்து நல்ல முடிவை எட்ட வேண்டும். கேரள முதல்வருடன், தமிழக முதல்வர் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும்.

இல்லையென்றால் தொடர்ந்து சர்வாதிகாரப்போக்கினை கையாளும், கேரளத்தவர்களைகட்டுக்குள் கொண்டு வர, நாங்களே நேரடியாக நெருக்கடி கொடுப்போம். எங்களுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கேரளாவில், முல்லை பெரியாறு அணைக்கு எதிரான விஷமப்பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.

தமிழகத்தில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மதுரை எம்.பி., வெங்கடேசன் போன்றவர்கள் தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதை நம்ப முடியவில்லை. தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் நிராகரிக்க வேண்டும். கேரளத்தவர்களை இனி எப்படி கையாள்வது என்பது குறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் முடிவை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!