ஊழல், லஞ்சப் பணத்தை திரும்ப பெற்ற விவசாயிகள்
தமிழகத்தில் முதல் முறையாக முறைகேடாகவும், லஞ்சமாகவும் அதிகாரிகள் வாங்கிய பணத்தை கூடலுார் விவசாயிகள் திரும்ப பெற்றுள்ளனர்.
கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் 40 கிலோ நெல் மூடைகள் தான் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் ஊழியர்கள் 5 கிலோ வரை கூடுதலாக எடை போட்டு கொள்முதல் செய்தனர். ஒவ்வொரு 40 கிலோ நெல் மூடைக்கும் ஒரு 5 கிலோ நெல் கூடுதலாக எடுத்தனர். தவிர நெல் போட்ட விவசாயிகளிடம் மூடைக்கு குறிப்பிட்ட பணத்தை பிடித்தமும் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் போலீசில் புகார் செய்தனர். நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இது தொடர்பாக கூடலுார் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாயிகளிடம் ஒவ்வொரு மூடைக்கும் 3 கிலோ 250 கிராம் நெல் கூடுதலாக அளவீடு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பணம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் 9 விவசாயிகளிடம் இவர்கள் ஒண்ணரை லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கியதும், 400 மூடைகளில் நெல் கூடுதலாக அளவீடு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த பணத்தை விவசாயிகளிடம் திரும்ப தர வேண்டும் என போலீசாரும் அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.தமிழகத்தில் முதல் முறையாக முறைகேடாகவும், லஞ்சமாகவும் அதிகாரிகள் வாங்கிய பணத்தை கூடலுார் விவசாயிகள் திரும்ப பெற்றுள்ளனர்.
இது குறித்து கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பாரதிய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு கூறியதாவது: தற்போது ஒன்பது விவசாயிகளுக்கு நீதி கிடைத்துள்ளது. வரவேற்க கூடிய விஷயம். ஆனால் இதில் முறைகேடு, ஊழல் செய்த அதிகாரிகள் தப்பி விட்டனர். தற்காலிக பணியாளர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உண்மையி்ல் தவறு செய்த அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும். அதேபோல் பல நுாறு விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களிடமும் இருந்து பெறப்பட்ட கூடுதல் நெல்லுக்கு உரிய பணம், லஞ்சமாக வாங்கிய பணம் திரும்ப தரப்பட வேண்டும். அதேபோல் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்து, கொள்முதல் நிலையத்தில் விற்கின்றனர். இதன் மூலம் ஒருமூடைக்கு அதிகாரிகளுக்கு 60 ரூபாயும், வியாபாரிகளுக்கு 240 ரூபாயும் லாபம் கிடைக்கிறது. பாடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகளும், வியாபாரிகளும் இப்படி இணைந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதும் தடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் கலெக்டர் சஜீவனா தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu