கேரளாவில் இருந்து தேனிக்கு வர நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதி: தேனி கலெக்டர் உத்தரவு
கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று அவசியம் என கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் எல்லைகளில் சோதனை தீவிரமடைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் பெருமளவு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று நான்கு பேருக்கு மட்டுமே இருந்தது. இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ௧௩ ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கேரளாவில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. தேனி மாவட்டமும், இடுக்கி மாவட்டமும் எழுபத்தி ஐந்து கி .மீ., எல்லைகளை பகிர்ந்துள்ளன. தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் பல லட்சம் பேர் கேரளா சென்று வருவார்கள். அதேபோல் கேரளாவில் இருந்தும் பல ஆயிரம் பேர் தேனி மாவட்டம் வருவார்கள். தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் ஐம்பது ஆயிரம் பேர் கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருவார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் கேரளா செல்ல கலெக்டர் முரளிதரன் தடை விதித்துள்ளார். தவிர இன்று காலை குமுளி மலைச்சாலை, போடி மெட்டு, கம்பம் மெட்டு சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு யார் வந்தாலும் அவர்கள் கொரோன நெகடிவ் சான்று பெற்ற எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் வந்து விட வேண்டும். இரண்டு தடுப்பூசி போட்ட சான்று வைத்திருப்பவர்கள் சான்றினை காட்டி வரலாம். மற்றவர்களுக்கு அனுமதியில்லை என உத்தரவிட்டார். அதேபோல் கேரளாவில் இருந்து வரும் அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கேரள எல்லைகளில் சோதனை தீவிரம் அடைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu